தமிழ்நாட்டில் சொந்தமாக நிலம் அல்லது வீடு வாங்குவதாக இருந்தாலும், சொத்து விற்பனை செய்வதாக இருந்தாலும் இது முக்கியம்.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) 2026 ஜனவரி 1 முதல் பில்டர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பில்டர்கள் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரே வங்கியில் Collection, Separate, and Transaction accounts ஆகிய மூன்று தனித்தனி கணக்குகளைப் பராமரிக்க வேண்டும்.
பணப் பாதுகாப்பு!

வாடிக்கையாளர்களிடம் பெறும் பணத்தில் 70 சதவீத தொகையை 'தனி கணக்கில்' (Separate Account) வைக்க வேண்டும். இதை அந்த குறிப்பிட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
வெளிப்படைத்தன்மை!

விளம்பரங்களில் கட்டாயமாக RERA பதிவு எண் மற்றும் QR கோடு இருக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் திட்டத்தின் தற்போதைய நிலையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம்!

தமிழ்நாட்டில் சொத்துப் பதிவுக்கான கட்டணங்கள் பின்வருமாறு:
முத்திரைத்தாள் கட்டணம் - 7%பதிவுக் கட்டணம் - 4%மொத்தக் கட்டணம் - 11%பெண்களுக்கான சலுகை - ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள சொத்துக்களைப் பெண்கள் வாங்கும் போது, பதிவுக் கட்டணத்தில் சிறப்புச் சலுகைகள் (சுமார் 3%) வழங்கப்படும்.
குடும்ப உறுப்பினர்களுக்குள் பரிமாற்றம்!

ரத்த உறவுகளுக்குள் வழங்கப்படும் செட்டில்மென்ட் அல்லது தான செட்டில்மென்ட் பத்திரங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் தலா 1 சதவீதம் மட்டுமே. அதிகபட்ச வரம்பு ரூ. 25,000 வரை இருக்கலாம்.
வழிகாட்டி மதிப்பு!

2026 ஜனவரி மாதம் தமிழக அரசு பல பகுதிகளில் வழிகாட்டி மதிப்பை (Guideline Value) மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை சுற்றுவட்டச் சாலைப் பகுதிகளில் நிலத்தின் அரசு மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. சொத்துப் பதிவு செய்யும் போது, சந்தை மதிப்பு அல்லது வழிகாட்டி மதிப்பு இதில் எது அதிகமோ அதன் அடிப்படையிலேயே 11 சதவீத கட்டணம் கணக்கிடப்படும்.
புதிய குத்தகை விதிகள்!

கோயில் மற்றும் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிகம் செய்பவர்களுக்குப் புதிய வாடகை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வணிகக் கட்டிடங்களுக்கு இடத்தின் சந்தை மதிப்பில் 0.60 சதவீதம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 0.05 சதவீதம் மாத வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்!

சொத்தை வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகளுக்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம். கடந்த 30 ஆண்டுகால தாய் பத்திரம் மற்றும் ஆவணங்கள் தேவை. சொத்தில் கடன் அல்லது சட்டச் சிக்கல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வில்லங்கச் சான்றிதழ் (EC) தேவை. பட்டா, சிட்டா போன நில வருவாய் ஆவணங்கள் இருக்க வேண்டும். சொத்தின் மதிப்பு ரூ. 50 லட்சத்தைத் தாண்டினால் 1 சதவீத TDS பிடித்தம் செய்ததற்கான ரசீது இருக்க வேண்டும்.
டிஜிட்டல் வசதி!

தற்போது 'TNREGINET' இணையதளம் மூலம் முன்கூட்டியே டோக்கன் பெறுவது மற்றும் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது அலுவலகங்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கிறது. எனவே நீங்கள் ஒரு தனி வீடோ அல்லது அடுக்குமாடி குடியிருப்போ அல்லது காலி மனை என எதை வாங்கினாலும் இதுபோன்ற விதிமுறை மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

