Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
sudarsana chakra story கிருஷ்ணருக்கு சுதர்சன சக்கரம் எப்படி கிடைத்தது?

sudarsana chakra story கிருஷ்ணருக்கு சுதர்சன சக்கரம் எப்படி கிடைத்தது?

Samayam Tamil 4 months ago

கவான் கிருஷ்ணர் என்று சொன்னதுமே நமக்கு நினைவிற்கு வருவது தலையில் மயிலிறகு இணைக்கப்பட்ட க்ரீடம், கையில் புல்லாங்குழல் தான்.

அதுவே கீதை சொன்ன கண்ணன் என்றால், ஒரு கையில் சக்கரம், மற்றொரு கையில் சங்கு, அர்ஜூனனுக்கு தேரோட்டும் காட்சி தான். சங்கு, போரை அறிவிக்க முழங்கப்படுவது அல்லது போரின் வெற்றியை அறிவிக்க முழக்கப்படுவது. ஆனால் இந்த சக்கரம் எங்கிருந்து வந்தது? சக்கரத்திற்கு, கிருஷ்ணருக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தீயசக்திகளை அழித்து, நன்மைகளை நிலைநாட்டும் தெய்வீக கருவியாக சுதர்சன சக்கரம் பார்க்கப்படுகிறது. இது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிக அற்புதமான பேராற்றல் கொண்ட கருவியாகும். "சு"என்றால் மங்களகரமான என்பதையும், "தர்சனம்" என்றால் காட்சி என்றும் பொருள். மங்களகரமான, தெய்வீகமான காட்சியை அருளக் கூடியது என்பதால் இதற்கு சுதர்சன சக்கரம் என்ற பெயர் ஏற்பட்டது.

பகவான் கிருஷ்ணர் வலது கையில் இருக்கும் சக்கரத்திற்கு சுதர்சன சக்கரம் என்று பெயர். இந்த சக்கரத்தை ஆழ்வார்களில் ஒருவராகவும் குறிப்பிட்டு, அதை சக்கரத்தாழ்வாராக கருதி வழிபடுகிறோம். சக்கரத்தாழ்வாரை, பெருமாளின் மறு வடிவமாக கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள். சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும், கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை. ஒரு சக்கரத்திற்கு இவ்வளவு மதிப்பா என நினைக்க வேண்டாம். சுதர்சன சக்கரத்திற்கு இந்த சிறப்பு எப்படி வந்தது என்பதற்கு புராணங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

முன்னொரு காலத்தில், அசுரர்களை அழிக்க ஆற்றல் மிக்க ஆயுதம் வேண்டி மகாவிஷ்ணு, சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு சிவனை பூஜிப்பார்.ஒருநாள் விஷ்ணுவின் பக்தியைச் சோதிக்க எண்ணிய சிவன், ஒரு மலரை மட்டும் மறைத்து வைத்தார்.

பூஜையின் முடிவில் ஒரு மலர் குறைவதைக் கண்ட விஷ்ணு, சற்றும் தயங்காமல் தன் கண்ணையே ஒரு தாமரை மலராகக் கருதி சிவனுக்கு அர்ப்பணிக்கத் துணிந்தார்.அதனால் தான் அவருக்கு 'பத்மாட்சன்' - தாமரைக் கண்ணன் என்ற பெயர் வந்தது. விஷ்ணுவின் இந்த ஈடு இணையற்ற பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்குத் தன் பேரொளியால் உருவான "சுதர்சன சக்கரத்தை" பரிசாக வழங்கினார்.

சுதர்சன சக்கரத்திற்கு மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது. தேவதச்சன் விஸ்வகர்மா, சூரியனின் துகள்களைக் கடைந்து எடுத்த போது, அதில் இருந்து தான் சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் மற்றும் முருகனின் வேல் ஆகியவை உருவானதாகவும் சொல்லப்படுகிறது. தன் கடமையையும் பக்தியையும் சரியாகச் செய்பவர்களுக்கு, அந்தப் பரம்பொருள் தேவையானது அனைத்தையும் தகுந்த நேரத்தில் தருவார் என்பதற்கு இதுவே சாட்சி.

16 திருக்கரங்களைக் கொண்ட சுதர்சனர், ஒவ்வொரு கையிலும் ஒரு ஆயுதத்தை தாங்கி காட்சி அளிக்கிறார். கல்வி சிறக்க, கடன்கள் தீர, தொழிலில் முன்னேற்றம் ஏற்பட சக்கரத்தாழ்வாரை வழிபடுவது வழக்கம். கல்வியில் ஏற்படும் தடைகள் நீங்கவும் சக்கரத்தாழ்வாரை அதிகமானவர்கள் வழிபடுவது உண்டு. பெருமாள் தனது பக்தனை காக்க வேண்டும் என நினைத்தால் அந்த மனதை விட வேகமாக சென்று, பக்தனுக்கு அருளக் கூடியதாக சுதர்சன சக்கரத்தை சொல்லுவார்கள். பக்தனை காப்பதற்கு பெருமாள் செல்வதற்கு முன் சுதர்சன சக்கரம் அங்கு சென்று விடுமாம். இதற்கு உதாரணமாக, கஜேந்திர மோட்சம் கதையை சொல்லுவார்கள். யானை, ஆதிமூலமே என்று அழைத்ததும் அங்கு முதலில் சென்று முதலையை வதம் செய்து, யானையை காத்தது சுதர்சன சக்கரம் ஆகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil