அதிமுகவில் இருந்து ஏற்கனவே ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் சிலரும் ராஜினாமா செய்யலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையில் இன்றைய தினம் இபிஎஸ் தலைமையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இரண்டு எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பல விதமான விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், அவர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய போகிறார்கள் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
அதாவது தேர்தல் தோல்வி குறித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். சுகுமார், கே.சி. வீரமணி இருவரும் கலந்துக்கொள்ளவில்லை.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாகவே இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தொகுதி பணி காரணமாக அதிமுக கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஆற்காடு எம்எல்ஏ எஸ்.எம். சுகுமார் கூறியுள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இபிஎஸ்ஸின் கூட்டத்தை எதற்காக புறக்கணித்தீர்கள். உங்களுக்கு அழைப்பு வரவில்லையா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு அழைப்பு வந்தது. மாவட்ட செயளாலரும் போன் பண்ணி அவசியமாக கலந்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். இங்கு மாவட்ட ஆட்சி தலைவர் தொகுதியில் கலந்தாய்வு குழு நடத்துகிறார். ஒட்டுமொத்த அதிகாரிகளும், கிட்டத்தட்ட 300 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். ஆற்காடு தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். அந்த நன்மதிப்பை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக தான் அனைத்து அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்தித்து என்னுடைய தொகுதிக்கு வேண்டிய கோரிக்கையை முன்வைத்தேன்.
இன்னைக்கு அதிகமான கேள்விகளை இங்கு கேட்டதே நான்தான். தொகுதி வளர்ச்சிக்காக இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். துணைப்பொதுச்செயலாளருக்கும் இந்த காரணத்தை சொல்லி, கூட்டத்தில் பங்கேற்க முடியாது என கூறி விட்டேன். மற்றபடி எந்த விதமான உள்நோக்கமும் கிடையாது. எனக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். நான் அதிமுக தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து கேட்கப்பட்டதற்கு அது உட்கட்சி விவகாரம் என்றார்.
அப்போது மாற்றுக்கட்சி போறதுக்கு உங்களுக்கு ஐடியா இருக்க என்று கேட்கப்பட்டதற்கு 100 சதவிகிதம் கிடையாது. சுடுகாட்டிற்கு போவேனே தவிர மாற்றுக்கட்சிக்கு போக மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார். நான் அதிமுக சார்பாக போட்டியிட்டு எடப்பாடி பழனிசாமியால் வெற்றி பெற்று இருக்கிறேன். ஆற்காடு தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் எல்லாம் சேர்ந்து தான் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். அதனால் நான் பின்வாங்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு கே.சி. வீரமணி சீனாவுக்கு சென்று இருக்கிறார். அதனால் தான் அவரும் கலந்துக்கொள்ளவில்லை என்றும் எஸ்.எம். சுகுமார் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

