Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தாம்பரம் - வேளச்சேரி மெட்ரோ ரயில்: 21 கி.மீ தூர பயணம்- ரூ.5,000 கோடி பிளானுக்கு கிரீன் சிக்னல் எப்போது?

தாம்பரம் - வேளச்சேரி மெட்ரோ ரயில்: 21 கி.மீ தூர பயணம்- ரூ.5,000 கோடி பிளானுக்கு கிரீன் சிக்னல் எப்போது?

Samayam Tamil 3 days ago

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில் வேளச்சேரி ரூட்டில் புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன்பிறகு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தலைநகர் சென்னையில் ப்ளூ, கிரீன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக பர்பிள், எல்லோ, ரெட் ஆகிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த திட்டங்கள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தேவையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. சென்னை மெட்ரோ விரிவாக்கம் - மத்திய அரசு ஒப்புதல் எப்போது?

முதலில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதமே திட்ட அறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், ஓராண்டிற்கும் மேலாக எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. அதில் தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி இடையிலான மெட்ரோ திட்டமும் அடங்கும்.

மொத்தம் 23 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டமானது தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி வழியாக கிண்டி செல்கிறது.


வேளச்சேரி ரூட்டில் புதிய மெட்ரோ வழித்தடம்

ஏற்கனவே கிண்டி வழியாக ப்ளூ லைன் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இது விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரை செல்வது குறிப்பிடத்தக்கது. எனவே இரண்டு வழித்தடங்களை இணைக்கும் சேவையாக பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி திகழ்கிறது. இங்கு வந்து செல்வதற்கு சென்னை மாநகரப் பேருந்துகள், பறக்கும் ரயில் சேவை ஆகியவை இருக்கின்றன.


சிரமம் தரும் புறநகர் ரயில், மாநகரப் பேருந்து சேவை

கிண்டி வழித்தடத்துடன் இணைக்கும் வகையில் சமீபத்தில் வேளச்சேரி - செயிண்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் நீட்டிப்பு சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இருப்பினும் தற்போதைய பொதுப் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தாம்பரத்தில் இருந்து நேரடியாக வேளச்சேரி வருவதற்கு ரயில்கள் இல்லை. இடையில் இறங்கி மாற வேண்டும். அதுவே மாநகரப் பேருந்தில் பயணித்தால் பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலை தாண்டி வருவதற்குள் படாத பாடு பட வேண்டி வரும். நிறைய கால அவகாசம் எடுத்து கொள்ளும்.


தாம்பரம் - மேடவாக்கம் ரூட்டில் பயங்கர டிராபிக்

சாலை மார்க்கமாக பயணித்தால் 20 கிலோமீட்டர் தூரத்தை கடக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் ஆகும். அதுமட்டுமின்றி போக்குவரத்து நெரிசல் காரணமாக உரிய நேரத்திற்கு மாநகரப் பேருந்துகள் வந்து சேருவதில்லை. எனவே பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்வோர் பேருந்து நிறுத்தங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. வரக்கூடிய பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஏற முடியாமல் தவிக்கின்றனர்.


வேளச்சேரி ரூட்டில் மெட்ரோ ரயில் தான் கரெக்ட்

தற்போது அனைத்து பேருந்துகளும் கதவுகளுடன் பயணிப்பதால் கூட்டத்தை உள்ளே முழுவதுமாக ஏற்றி புறப்படுவது பெரும் சவாலாக காணப்படுகிறது. சாலை விரிவாக்கம் செய்வதும் பிரச்சினைக்குரிய விஷயமாக இருக்கிறது. ஏனெனில் ஏராளமான குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் வந்துவிட்டன. இவற்றை அகற்றுவது சாத்தியமில்லை என்கின்றனர். இந்நிலையில் தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வந்தால் மக்கள் நேரடியாகவும், விரைவாகவும் பயணிக்க முடியும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil