Dailyhunt
tamil new year 2026 chithirai vishu kani சித்திரை முதல் நாளில் கனி காணும் பழக்கம்  வந்த கதை தெரியுமா?

tamil new year 2026 chithirai vishu kani சித்திரை முதல் நாளில் கனி காணும் பழக்கம் வந்த கதை தெரியுமா?

Samayam Tamil 1 week ago

மிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இதை கேரள மக்கள் சித்திரை விஷூ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

சூரிய பகவான், 12 நாளிலும் தனது பயணத்தை நிறைவு செய்து விட்டு, மீண்டும் புதிதாக மேஷம் ராசியில் இருந்து தனது பயணத்தை புதிதாக துவங்கும் நாள் என்பதால் சித்திரை முதல் நாள், சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு ஆன சித்திரை முதல் நாளில் செய்ய வேண்டிய முதல் சடங்காக சொல்லப்படுவது கனி காணுதல். தமிழ்நாடு, கேரளாவில் இந்துக்களால் கடைபிடிக்கப்படும் மிக முக்கியமான சடங்காக இது கருதப்படுகிறது. இதை சித்திரை கனி, சித்திரை விஷூ, விஷூ கனி, கனி காணுதல் என பல பெயர்களில் குறிப்பிடுவது உண்டு. விஷூ என்றால் விடியற்காலையில் முதலில் காண்பது என்று பொருள்.

கனி காணுதல் என்றால் என்ன?

சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாள் இரவு, ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை பாக்கு, இனிப்பு, தங்கம் நகைகள், தங்க காசுகள், பணம், குங்குமம், மஞ்சள், அட்சதை, பூ ஆகியவற்றை வைத்து, அதற்கு முன் ஒரு கண்ணாடியை வைத்து, பூஜை அறையில் சாமி படத்திற்கு முன்பாக வைத்து விட்டு தூங்க சென்று விடுவார்கள். தமிழ் புத்தாண்டு அன்று காலை எழுந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் நேரடியாக பூஜை அறைக்கு சென்று, தட்டில் வைக்கப்பட்டுள்ள மங்கள பொருட்களை பார்த்து விட்டு, அவற்றை தொட்டு கண்களில் வைத்து வணங்கி விட்டு, கண்ணாடியில் நம்முடைய முகத்தை பார்க்க வேண்டும். இதற்கு பெயர் தான் கனி காணுதல். இப்படி ஆண்டின் முதல் நாளில் மங்கள பொருட்களை முதலில் கண்ட பிறகு அந்த ஆண்டை துவங்கினால், அந்த ஆண்டு முழுவதும் மங்களகரமாகவும், செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை.

கனி காணுதல் உருவான கதை :

விஷூ கனி சடங்கு உருவானது ராமாயணத்துடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. புராணங்களின்படி, ராவணன் உலகில் தானே பெரியவன் என்ற அகந்தை ஏற்பட்டது. தன்னுடைய அனுமதி இல்லாமல் எதுவும் நடக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. இதனால் சூரியன் உதிப்பது கூட அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சூரியனின் கதிர்கள் அவனது அனுமதி இல்லாமல் அவரது அரண்மனைக்கு நேரடியாக விழுவது. சூரியனின் கடும் வெப்பம் ஆகியவை ராவணனுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆணவத்தில் உச்சத்தில் இருந்த ராவணன், சூரியனுடன் போர் புரிய முடிவு செய்தான்.

இதனால் பயந்து போன சூரியன், அன்றிலிருந்து ராவணனின் இருக்கும் திசையில் தன்னுடைய கதிர்களை வீசுவதை நிறுத்தினான், சூரியன். இதனால் பயிர்கள் சேதமடைந்தன. நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. மக்கள் இருளில் வாழ்ந்தனர். ஸ்ரீராமர் அவர்களை காப்பாற்ற வரும் வரை, ராமாயண போரில் ராவணன் வீழும் வரை அந்த மக்கள் இருளிலிலேயே இருந்தனர். போரில் ராவணன் இறந்த பிறகே அங்கு மீண்டும் சூரிய ஒளி வீச துவங்கியது.இந்த நாளை நினைவுகூறும் விதமாக விஷூ கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil