தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் 82.24% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களிலேயே இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும். இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 78.29% வாக்குப்பதிவு நடந்ததே அதிகமாக இருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் இன்று நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை சுமார் 4.71 கோடி மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தியுள்ளனர்.
மாவட்ட வாரியாக பார்க்கும்போது கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 89% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.சென்னை மாவட்டத்தில் 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 73.44% வாக்குப்பதிவு மட்டுமே பதிவாகியுள்ளது.
முக்கிய தலைவர்களின் தொகுதிகளிலும் அதிக வாக்குப்பதிவு காணப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் 89.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 86.72% மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் 79.32% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 83.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 71.88% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
முன்னைய தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம்:
2021 - 73.63%
2016 - 74.81%
2011 - 78.01%
2006 - 70.82%
2001 - 59.07%
1996 - 66.95%
1991 - 63.84%
1989 - 69.69%
1984 - 73.47%
1980 - 65.42%
1977 - 61.58%
1971 - 72.10%
1967 - 76.57%
சென்னையில் மாலை 6 மணிக்குப் பிறகும் வாக்களிக்க ஏற்பாடுகள்
சென்னையில் மாலை 6 மணிக்குப் பிறகும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கன் பெற்றவர்கள் எவ்வளவு நேரமாக இருந்தாலும் தங்கள் வாக்கை பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.
சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளிலும், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த அனைவரும் இரவு 8 அல்லது 9 மணி ஆகியாலும் வாக்களிக்க முடியும் வகையில் முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி
2026 சட்டமன்ற தேர்தலுகாக திமுக தலைமையில் 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. அதே போல் அதிமுக தலைமையில், பாமக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகள் அமைத்தது. மேலும் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டனர். இந்த தேர்தல் மற்ற தேர்தல்களை போல் அல்லாமல் விஜய் வருகையால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மொத்தமுள்ள் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இதுவரை சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத அளவில் 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

