Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழகத்தில் அதிகரிக்கும் அரசு துறை காலி பணியிடங்கள்: நிரப்புவதில் என்ன சிக்கல்?

தமிழகத்தில் அதிகரிக்கும் அரசு துறை காலி பணியிடங்கள்: நிரப்புவதில் என்ன சிக்கல்?

Samayam Tamil 3 days ago

டந்த திமுக ஆட்சியில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை ஏறிவிட்டது என்று முதலமைச்சர் விஜய் பேசியதை பார்த்திருப்போம்.

இதுதொடர்பான வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், மாநிலத்தின் தற்போதைய வருவாய், கடன் சுமை, துறை வாரியாக நிதி நிலைமை, செலவுகள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். இது தமிழகத்தின் நிதி நிலையை வெளிச்சம் போட்டு காட்டிவிடும். அரசு திறம்பட செயல்பட வேண்டுமெனில் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும் சரியாக செயல்பட வேண்டும். அப்படி செய்தால் தான் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

அரசு துறை காலி பணியிடங்கள் அதிகரிப்பு

  • நாளுக்கு நாள் அரசு துறை காலி பணியிடங்கள் அதிகரித்து கொண்டே சென்றால் எப்படி திறம்பட செயல்படுவது என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.
  • சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், 5 லட்சத்தை தாண்டிய அரசு துறை காலி பணியிடங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
  • ஒட்டுமொத்த அரசு துறைகளில் 41.7 சதவீதம் காலியாக இருப்பதாக கூறியிருந்தார்.
  • ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாகின்றன.
  • ஆனால் அவற்றில் 10 ஆயிரம் இடங்கள் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.
  • எஞ்சியுள்ள 40 ஆயிரம் இடங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்த வண்ணம் செல்கின்றன.

தவெக அரசுக்கு காத்திருக்கும் சவால்

இதனால் இரண்டு வித சிக்கல்கள் எழுகின்றன. அரசு துறைகளின் செயல்பாடுகள் பாதிப்பு, படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது கனவாக மாறுதல். எனவே தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசிற்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. அரசு துறை காலி பணியிடங்களை நிரப்புவதில் கடந்த காலங்களில் சரிவர செயல்படவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இலவச திட்டங்களால் ஏற்படும் நெருக்கடி

இதுதொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகி கங்கா சேகர் அவர்களிடம் சமயம் தமிழ் சார்பாக பேசினோம். அவர் கூறுகையில், இலவச திட்டங்களை முக்கியமான காரணங்களில் ஒன்றாக சொல்லலாம் என்றார். கடந்த 2006ஆம் ஆண்டு இலவச வண்ண தொலைக்காட்சி திட்டத்தை கருணாநிதி அறிவித்தார். அதேபோல் இலவச மிக்சி, கிரைண்டர் திட்டத்தை ஜெயலலிதா செயல்படுத்தினார். அதன்பிறகு இல்லத்தரசிகள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை ஊக்கத்தொகை எனப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

திமுக அரசின் நலத்திட்ட அறிவிப்புகள்

குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 5 ஆண்டு காலத்தில் பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தியது. அதில், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ் புதல்வன், இலவச மின்சாரம் உள்ளிட்டவை அடங்கும். இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு என்பது மொத்த வருவாய் செலவினத்திற்கு சுமார் 15 சதவீதம் வரை இருக்கும். இதையடுத்து அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், பல்வேறு திட்டங்களுக்கு பெற்ற கடனுக்கான வட்டி, உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கு 75 சதவீதத்திற்கும் அதிகமான நிதி பயன்படுத்தப்படுகிறது.

தற்காலிக ஊழியர்கள் நியமன நடவடிக்கை

1நிதிச் சுமையை குறைக்க அரசு வேலைகளில் நிரந்தர ஊழியர்களுக்கு பதிலாக ஒப்பந்த ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களை நியமிக்கும் வேலைகளில் கவனம் செலுத்துகின்றனர்.
2இதன்மூலம் ஓய்வூதியம் தொடர்பான நெருக்கடி இருக்காது.
3மேலும் அந்த பணிக்கு நிரந்தர ஊழியருக்கு அளிக்கும் சம்பளத்தில் கிட்டதட்ட மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் கொடுக்கும் நடைமுறையை வைத்திருக்கின்றனர்.

கடனுக்கான வட்டி தொகை அதிகரிப்பு

இதுமட்டுமின்றி ஏற்கனவே மாநில அரசு சார்பில் வாங்கப்பட்ட கடன் தொகைக்கான வட்டி என்பது பெரிய நெருக்கடியாக மாறி வருகிறது. 10 லட்சம் கோடி ரூபாய் கடன் என்று வைத்துக் கொண்டால் அதற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுதோறும் வட்டி கட்ட வேண்டியுள்ளது. எனவே இலவச திட்டங்களும், கடனுக்கான வட்டி தொகையும் மட்டுமின்றி இதர பிற செலவினங்களும் அரசுக்கு நெருக்கடியாக மாறிவிடுகிறது. ஆனால் செலவினங்களுக்கு ஏற்ப வருவாயை பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி செய்தால் தான் வருவாய், செலவினங்களை சமாளித்து அரசு ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதிலும் கவனம் செலுத்த முடியும் என்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil