Dailyhunt
தமிழ்நாட்டில் அனல் காற்று தாக்கம் தொடரும்: வேலூர் முதல் சென்னை வரை உள்ள மக்களே..- வெப்ப எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அனல் காற்று தாக்கம் தொடரும்: வேலூர் முதல் சென்னை வரை உள்ள மக்களே..- வெப்ப எச்சரிக்கை!

Samayam Tamil 2 weeks ago

வேலூரிலிருந்து சென்னை வரை உள்ள பகுதிகளில் மே 5ஆம் தேதி வரை கடும் வெயில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கோடைகால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாநிலத்தின் 17 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழ்நாட்டின் வெப்பநிலை

தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், சில பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது. ஆனால், மறுப்புறம் அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் பதிவு செய்யப்பட்டது. அங்கு 108.3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் உயர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி மற்றும் ஈரோட்டில் 106.5 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி 105.6 டிகிரி, திருத்தணி 105.1 டிகிரி, மதுரை விமான நிலையம் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் என பல இடங்களில் வெயில் கடுமையாக இருந்தது.


முதன்முறையாக 104.4 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு

சென்னையிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மீனம்பாக்கத்தில் இந்த ஆண்டில் முதன்முறையாக 104.4 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு செய்யப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் 100.4 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால் நகரவாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.வானிலை நிபுணர்கள் கூறுவதன்படி, இந்த கடும் வெப்பநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


அனல் காற்று தாக்கம் தொடரும்

இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவித்து உள்ளார். குறிப்பாக வேலூர் முதல் சென்னை வரை உள்ள பகுதிகளில் மே 5ஆம் தேதி வரை வெப்பம் குறைய வாய்ப்பில்லை என அவர் கணித்துள்ளார். மேலும், வரும் செவ்வாய்க்கிழமை வரை அனல் காற்றின் தாக்கமும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் வெப்பநிலை மெதுவாகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


வானிலை எச்சரிக்கை

இந்நிலையில், மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக மதிய நேரங்களில் தேவையற்ற வெளிச்செல்லுதலை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். காட்டன் உடைகள் அணியவும், நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருக்காமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.கோடை வெப்பம் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் நிலையில், அனைவரும் உடல்நலத்தை கவனித்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil