தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த நான்காம் தேதி வெளியான நிலையில் 108 இடங்களில் வெற்றி தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைக்காமல் இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பியது.
இது சம்பந்தமாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. விஜய்யை உடனடியாக ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைக்க வேண்டுமென விசிக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் எம்பி இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், எந்தக் கட்சிக்கும் மக்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. தமிழ்நாடு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாத்து இந்த முடிவு. என் சகோதரர் மு.க. ஸ்டாலின், 'மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அறிவித்து இருக்கிறார்.
அவருடைய அரசியல் முதிர்ச்சியை மதிக்கிறேன். இப்போ அரசியலைப்பு பொறுப்பில் உள்ளவர்களும் அதே கடமையினை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை கிடையாது. அவர்களுடைய அரசியலைப்பு கடமைக்கான நினைவூட்டல். தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவதிப்பதாகும் என தெரிவித்துள்ளார்.
233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருப்பது மாநிலத்திற்கு நேரும் அவமானம். மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம் என்று குற்றம்சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என தெளிவாக சொல்லியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு இப்போ பேசி கொண்டிருப்பது கட்சி அரசியல் கிடையாது.
இது ஓர் இந்திய குடிமகனின் கொள்கை குரல். தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆக வேண்டும் எனவும் கமல் ஹாசன் தன்னுடைய பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் ஆட்சி அமைப்பதற்கு விஜய்யை அழைக்காமல் இருக்கும் நிலையில், தவெகவினர் அதுக்குறித்து எந்த கருத்தும் கூறாமல் இருக்கின்றனர். அதே நேரம் விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் தற்போது கமல் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தவெகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இதனிடையில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை பெற்று ஐந்து இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தவெக பக்கமாக தாவியுள்ளது காங்கிரஸ். அமைச்சரவையில் இடம் என்ற சில நிபந்தனைகளுடன் தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அரசியல் களத்தில் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது காங்கிரஸ்.
மற்றொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரியுள்ளது. விஜய் ஆட்சி அமைப்பதற்கு துணை நிற்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ள நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாமா, வேண்டமா என விசிக உள்ளிட்ட கட்சிகள் தற்போது ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

