தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை (மே 02ந் தேதி) நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அண்ணை பேராலயத்திற்கும், நாகூர் ஆண்டவர் தர்காவுக்கும் சென்று வழிபாடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில், 85 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாறு படைத்திருந்தது தமிழக சட்டமன்றம். இந்த அதிகபட்ச வாக்குப்பதிவுக்கு தவெகவின் வருகையும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்து தனித்து களம் கண்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளது. வருகின்ற மே 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மேலும், அன்றைய தினமே முடிவுகளும் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 29ந் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.
தேர்தலில் தவெகவுக்கே வெற்றி வாய்ப்பு
அதில், பெரும்பாலான கணிப்புகள் திமுக தான் இந்த முறை ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தன. ஆனால், ஆக்ஸஸ் மை இந்தியா கணிப்புகள் மட்டும் தவெக தனிப்பெருன்மான்மையை பெற்று அமோக வெற்றி பெறும் கணித்திருந்தது. எப்போது, இரு பெரும் கட்சிகளுக்கு மட்டுமே சாதகமாக இருந்த கணிப்புகள் தற்போது, மூன்றாவது கட்சிக்கு சாதகமாக கணிக்கப்பட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
கவனம் பெரும் விஜய்யின் ஆன்மீக பயணம்
இதற்கு மத்தியில், தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், விஜய் கேற்கொண்டு வரும் ஆன்மீக பயணம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த ஏப்ரல் 28ந் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று விஜய் வழிபாடு நடத்தினார். பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணியசுவாமியை தரிசனம் செய்தார்.
விஜய்யின் அடுத்த ஆன்மீக பயணம்
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதோடு, வெற்றி வேலும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுதினமே (ஏப்.29) மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தனி விமானம் மூலம் சென்று தரிசனம் செய்தார். தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் அடுத்த ஆன்மீக பயணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேளாங்கண்ணி, நாகூர் தர்கா தரிசனம்
அதன்படி, நாளை மே 02 ஆம் தேதி காலை 5 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிராத்தனை மேற்கொள்ள இருக்கிறார். அதைத்தொடர்ந்து, மத நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கும் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளார். பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களை ஒரே பயணத்தில் இணைப்பதன் மூலம் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

