சட்டமன்ற தேர்தல் முடிகளுக்கு பின்பாக யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக வதந்திகள் பரப்பபட்டது.
இது சம்பந்தமாக தவெகவினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் நிர்மல் குமார் தற்போது வரை திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதற்காக முயற்சி செய்து வருவதாக பேசி இருந்தார். இந்நிலையில் இது சம்பந்தமாக அதிமுகவின் சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக தவெகவினர் தொடர்ந்து பேசி வரும் நிலையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணையும் அதிமுகவினரும் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். திமுகவின் உதவியுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்தார். இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியுமென அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பேசியுள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக அதிமுகவின் விவசாய பிரிவு செயலாளரும், சட்டமன்ற கொறடாவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகி விடும் என்ற தத்துவத்தை கடைபிடித்தவன் கோயபல்ஸ். தமிழக மற்றும் அகில இந்திய அரசியலில் ஒரு சில அரசியல்வாதிகள் பல்வேறு காலக்கட்டங்களில் கோயபல்ஸ் வேடம் பூண்டு, அவர்களுடைய முயற்சியில் தோல்வியும் கண்டதுண்டு.
தமிழக அரசியலிலும் பல கோயபல்ஸ்கள் வலம் வருகின்றனர். அவர்கள் இதுநாள்வரை நம்முடைய இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல்வேறு சோதனைகளையும், தேர்தல் களத்தில் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளனர். அப்போதும் கூட அதிமுகவில் இருந்து பலர் வெளியேறி இருக்கிறார்கள்.
ஆனால் அதிமுகவுக்கு சோதனை ஏற்படும் போதெல்லாம் இனிமேல் அதிமுகவிற்கு எதிர்காலமே இல்லையென தாங்களாகவே முடிவெடுத்து விட்டு, சிலர் ஆளுங்கட்சியில் அடைக்கலம் தேடி ஓடுகிறார்கள். சென்ற இடத்தில் மரியாதை கிடைக்க வேண்டும், மதிப்பு உயர வேண்டுமென்று இல்லாத ஒன்றை, அதிமுக தொண்டன் நினைத்து பார்க்காத ஒன்றை திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க முயற்சி செய்தார் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
மனசாட்சிக்கு விரோதமாக அபாண்டமானதொரு குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மீது சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மைனாரிட்டி தவெக அரசுக்கு ஆதரவு அளித்த 25 பேரில் யாரிடமாவது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சார்ந்த எம்எல்ஏக்களுடன் நாம் ஆட்சி அமைக்க முயற்சி செய்யலாம் என்று இபிஎஸ் தெரிவித்தார் என கூற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. மேலும் இப்போது தங்களின் நல்வாழ்விற்காக சொன்ன ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த இயக்கத்தில் இருந்து ஓடிப்போக வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் செயல்படுபவர்களை தடுக்க முடியாது. ஆனாலும் பொய்யை பரப்பி ஆகாயத்தில் கோட்டை கட்ட முயற்சிப்பவர்களின் எண்ணம் கானல் நீராகத்தான் போகும். இவ்வாறு அந்த அறிக்கையில் திமுக உதவியுடன் இபிஎஸ் ஆட்சி அமைக்க முயற்சி செய்தார் என அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைபவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

