Dailyhunt
unknown Kanchipuram temple காஞ்சி காமாட்சி தெரியும்.காஞ்சி கௌசிகீசகி பற்றி தெரியுமா?

unknown Kanchipuram temple காஞ்சி காமாட்சி தெரியும்.காஞ்சி கௌசிகீசகி பற்றி தெரியுமா?

Samayam Tamil 0 months ago

மிழகத்தின் மிகப் பழமையான ஆன்மீக நகரங்களில் ஒன்று காஞ்சிபுரம். "ஆயிரம் கோயில்களின் நகரம்" என்று போற்றப்படும் இந்த புனித நகரம், பல நூற்றாண்டுகளாக சைவம், வைணவம், சக்தி வழிபாடு ஆகியவற்றின் முக்கிய மையமாக திகழ்கிறது.காஞ்சிபுரம் என்றாலே பெரும்பாலான பக்தர்களுக்கு நினைவிற்கு வருவது, காமாட்சி அம்மன் ஆலயம், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் ஆலயம் போன்ற உலகப் புகழ்பெற்ற தலங்கள் தான்.

ஆனால் இந்தப் புனித நகரத்தில், அதிகம் அறியப்படாத பல அரிய ஆலயங்கள் இன்னும் மறைந்து கிடக்கின்றன. அவற்றில் ஒன்று தான் காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோவில், மற்றொரு பெயராக கௌசிகீஸ்வரர் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. சிறிய அளவில் இருந்தாலும், ஆன்மீக வரலாறு, சோழர் கால கட்டிடக்கலை, அற்புதமான சிற்பங்கள் ஆகியவற்றால் இந்த ஆலயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. காமாட்சி அம்மன் ஆலயத்தின் அன்னசத்திரம் அருகிலும், காமாட்சி கல்யாண மண்டபத்தை ஒட்டியவாறும் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய சன்னதியாக அமைந்துள்ள இந்த கோவில், வெளிப்படையாக சிறியதாக தோன்றினாலும், இந்த ஆலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் கோப்பரகேசரி வர்மன் காலத்தைச் சேர்ந்த தகவல்கள் காணப்படுகின்றன. அதன் அடிப்படையில் இந்த ஆலயம் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று அறியப்படுகிறது.

முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட கற்றளி கற்கோவில் என்ற தனிச்சிறப்பும் இதற்கு உள்ளது. இந்த ஆலயம் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராணப் படலங்களிலும் இடம்பெற்றுள்ளன. ஒரு காலத்தில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த இந்த ஆலயம் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு :

இந்த ஆலயத்தின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. புராணங்களின் படி, உலகை துன்புறுத்திய சும்பன் மற்றும் நிசும்பன் என்ற இரு அசுரர்களை அழிக்க உமாதேவி தனது கருஞ்சடையிலிருந்து ஒரு சக்தியை உருவாக்கினாள். அந்த சக்தி தான் கௌசிகீசகி அம்மன். அவள் அசுரர்களை அழித்து உலகிற்கு அமைதி அளித்த பிறகு, இந்த காஞ்சி தலத்திற்கு வந்து ஈஸ்வரனை வழிபட்டதாக கூறப்படுகிறது. அதனால் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், "கௌசிகீஸ்வரர்" என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். மேலும் கௌசிகீசகி அம்மன் காஞ்சிநகரின் காவல் தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார்.

இந்த ஆலயத்தின் மிகப் பெரிய தனிச்சிறப்பு அதன் குறுஞ்சிற்பங்கள் ஆகும்.தலவரலாற்றை எடுத்துரைக்கும் பல சிற்பங்கள் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சோழர் கால சிற்பிகளின் கலைநயத்தை வெளிப்படுத்தும் இந்த சிற்பங்கள், புராணக் கதைகளை தெய்வங்களின் காட்சிகளை

ஆன்மீக நிகழ்வுகளை மிக நுணுக்கமாக பதிவு செய்கின்றன. இந்த ஆலயத்தில் காணப்படும் பழமையான பிள்ளையார் சிலை மிகவும் விசேஷமானது.இந்த விநாயகர், மூஷிக வாகனத்துடன் பூதகணங்கள் சூழ காட்சி தருகிறார். இந்தச் சிலை கரிகால சோழர் காலத்தைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது.

ஆலயத்தின் தனிச்சிறப்புகள் :

இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக வேப்பமரம், அரசமரம் இரண்டும் ஒன்றாக அசைந்து வளர்ந்து காணப்படுவது ஒரு விசேஷமாக கருதப்படுகிறது.இந்த ஆலயத்தின் விமானம், ஒற்றை அடுக்கு உருண்டை வடிவம் கொண்டது. கருவறையில் கம்பீரமாக காட்சி தரும் சொக்கீஸ்வரருடன் காமாட்சி அம்மனும் இருப்பது இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பாகும்.கருவறை மேலுள்ள விதானத்தில் ஒரு வியப்பூட்டும் சிற்பம் உள்ளது. அதில், ஒரு நாகம் சந்திரனை விழுங்கும் காட்சி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றியுள்ள கோட்டங்களில் மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மா அருள் பாலிக்கின்றனர். இதோடு யோக நரசிம்மர் சன்னதியும் இங்கு காணப்படுகிறது.இந்த ஆலயத்தின் மிக அபூர்வமான சிறப்பு என்னவென்றால், பஞ்சபூத தலங்களின் புராண வரலாறுகள் அனைத்தும் குறுஞ்சிற்பங்களாக இங்கு காணப்படுகின்றன.

அதில் குறிப்பிடத்தக்கது, 3500 ஆண்டுகள் பழமையான மாமரத்தின் கீழ் காமாட்சி அம்மன் ஏகாம்பரநாதரை வழிபடும் காட்சி. இந்த காட்சிகள் அனைத்தும் மிக அழகான சிற்ப வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன.பஞ்சபூத தலங்களின் மகிமையை ஒரே இடத்தில் விளக்கும் ஆலயம் இதுவே என்ற பெருமையும் இந்த சிறிய ஆலயத்திற்கு உண்டு. இந்த ஆலயத்தில் மாதந்தோறும் பிரதோஷம்,சிவராத்திரி போன்ற சிவபூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. காஞ்சிக்கு சென்றால் தவறாமல் தரிசிக்க வேண்டிய தலம் இது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil