முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு, விரத நாட்களில் ஒன்று வைகாசி விசாகம். இது முருகப்பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது.
வைகாசி மாதமான மே/ஜூன் மாதங்களில் வழக்கமாக இவ்விழா கொண்டாடப்படுவது வழக்கம். வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே வைகாசி விசாகமாக கொண்டாடுகிறோம். இந்தியா மட்டுமின்றி, இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளிலும் உள்ள தமிழர்களால் வைகாசி விசாகம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
வைகாசி விசாகம் வரலாறு :
சிவபெருமானை நோக்கி பல ஆண்டுகள் கடும் தவம் இருந்த சூரபத்மன் என்னும் அசுரன், தனக்கு தாயின் கருவில் உருவாகாத, அதே சமயம் சிவ-சக்தி ஒன்று சேர்ந்த ஒரு சக்தியால் மட்டுமே மரணம் ஏற்படு வேண்டும் என வரம் பெற்றான். இந்த வரத்தால் தேவர்களை துன்புறுத்தினான் அசுரன். சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட, தன்னுடைய நெற்றிக் கண்கை திறந்தார் சிவபெருமான். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொரிகள் சரவண பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் 6 பகுதிகளாக விழுந்தது. அந்த ஆறு தீப்பொரிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அவர்களை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகை பெண்களிடம் வழங்கினார் சிவபெருமான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து தன்னுடைய சக்தியால் ஆறுமுகமும், 12 திருக்கரங்களும் கொண்ட உருவமாக மாற்றினாள் அன்னை பார்வதி. அதோடு தனது சக்தியில் உருவான வேலை, முருகப் பெருமானுக்கு ஆயுதமாக வழங்கினார். இதை கொண்டு சூரபத்மனையும் அவனது சகோதரர்களையும் போரில் வெற்றி கொண்டு, வதம் செய்து, தேவர்களை காத்தார் முருகப் பெருமான். தீமைகளை அழித்து, நன்மையை காப்பதற்காக முருகப் பெருமான் அவதரித்த தினமே வைகாசி விசாகம் ஆகும்.
வைகாசி விசாகம் வழிபாடுகள் :
வைகாசி விசாகம் அன்று ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவார்கள். பலரும் பால்குடம் சுமந்து வந்து, முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இன்னும் சிலர் பாத யாத்திரையாக முருகப் பெருமானின் ஆலயங்களுக்கு சென்று நேர்த்திக் கடன் நிறைவேற்றுவார்கள். கோவில்களில் வைகாசி விசாகம் அன்று புரோகிதர்கள் பலரும் ஒன்று சேர்ந்து குக்குட ஹோமம் நடத்துவார்கள். இது மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு பால், பழம், இனிப்புகள் படைத்து வழிபடுவது சிறப்பு.
வைகாசி விசாகம் விரத பலன்கள் :
வைகாசி விசாகம் அன்று முருகப் பெருமானை வேண்டி விரதம் இருந்து, அவரது மந்திரங்களை சொல்லி வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். வேண்டுதல்கள் நிறைவேறும். பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
வைகாசி விசாகம் 2026 தேதி :
| வைகாசி விசாகம் 2026 | மே 30 சனி |
| பெளர்ணமி திதி துவக்கம் | மே 30 பகல் 12.55 |
| பெளர்ணமி திதி நிறைவு | மே 31 பகல் 02.45 |
| விசாகம் நட்சத்திரம் துவக்கம் | மே 29 பகல் 12.31 |
| விசாகம் நட்சத்திரம் நிறைவு | மே 30 பகல் 02.18 |

