மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தை போற்றும் திருநாளே வராக ஜெயந்தியாகும். புராணங்களின் படி, அசுரர்களால் கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட பூமி தாயை மீட்பதற்காக பெருமாள் பன்றி முகத்துடன் வராக அவதாரம் எடுத்தார்.
வராக பெருமாள் தனது தந்தங்களால் பூமியை தூக்கி, மீண்டும் சரியான இடத்தில் நிலை நிறுத்தில், பூமி மீண்டும் இயங்கவும், படைப்பு தொழில் சரியாக நடக்கவும் உதவி செய்தார். தர்மத்தை நிலைநாட்டுவதற்காக வராகராக பெருமாள் அவதரித்த நாளையே வராக ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.
வராக ஜெயந்தி 2026 தேதி :
ஆண்டுதோறும் பங்குனி மாத தேய்பிறையில் வரும் கேட்டை நட்சத்திரம் அன்று வராக ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வராக ஜெயந்தி ஏப்ரல் 07ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
| வராக ஜெயந்தி 2026 தேதி | ஏப்ரல் 07, செவ்வாய் |
| கேட்டை நட்சத்திரம் துவக்கம் | ஏப்ரல் 07 அதிகாலை 02.22 |
| கேட்டை நட்சத்திரம் நிறைவு | ஏப்ரல் 08 காலை 04.54 |
வராக ஜெயந்தி முக்கியத்துவம் :
வராக ஜெயந்தி அன்று வராக பெருமாளை அல்லது மகாவிஷ்ணுவை வழிபடுவதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிய திட்டங்கள் துவங்குவதற்கு, நீண்ட கால முதலீடுகளை துவங்குவதற்கு, வாழ்க்கையில் வளம் மற்றும் நிலைத்தன்மை ஏற்படுவதற்கும் பெருமாளை வணங்க வேண்டி மிக முக்கியமான நாளாகும். விவசாயம், ரியல் எஸ்டேட் போன்ற பூமி சார்ந்த துவங்க விரும்புபவர்கள், இந்த நாளில் துவங்குவது சிறப்பு. வராக பெருமாளை வணங்கி விட்டு பூமி சார்ந்த பணிகளை துவங்கினால் அது வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு வராக ஜெயந்தி, மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என சொல்லப்படும் வராஹி அம்மனுக்குரிய பஞ்சமி திதியில் அமைந்துள்ளது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் வராஹி அம்மனை வழிபடுவதால் வெற்றிகள் கிடைக்கும். பயம், நோய்கள் விலகி, வளமான வாழ்க்கையை வாழலாம். பஞ்சமி திதியில் வராஹி அம்மனை வழிபட்டால் கடன் தீரும், பகை விலகும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளையும் வழிபடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பெருமாள் மற்றும் வராஹியின் அருளால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
வராக ஜெயந்தியில் செய்ய வேண்டியவை :
- பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், ஹோமங்களில் கலந்து கொள்ளலாம்.
- வராக அவதாரத்தை விளக்கும் கதைகளின் புனித நூல்களை வாசிக்கலாம்.
- இந்த நாளில் தர்மம் செய்வது நல்லது. குறிப்பாக உணவு தானம் செய்வது மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது.
- விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
- இந்த நாளில் புதிய கட்டுமான வேலைகள், சொத்துக்கள் முடிப்பது, வீடை புதுபித்தல் அல்லது புதிய வீடு கட்ட துவங்குவது ஆகியவை வராக பெருமாளின் அருளை பெற்றுத் தரும்.

