Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வி.எஸ் பாபு வெற்றி உறுதி.. ஸ்டாலினுக்கு தேவையில்லாத சங்கடம் -திமுக லீகல் விங் மீது வலுக்கும் கேள்வி?

வி.எஸ் பாபு வெற்றி உறுதி.. ஸ்டாலினுக்கு தேவையில்லாத சங்கடம் -திமுக லீகல் விங் மீது வலுக்கும் கேள்வி?

Samayam Tamil 5 days ago

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்த தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், வி.எஸ்.பாபுவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஸ்டாலின் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கொளத்தூரில் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி தோல்வி

2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.எஸ்.பாபு களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கை முடிவில், ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என புகார்

ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தல் முடிவுகளை சரிபார்ப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென கோளாறாகி நின்றதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ஆறு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகளையும், வாக்காளர் சரிபார்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரங்களான VVPAT-ல் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் சரிபார்ப்பு நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பாக தீவிரமான சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் வாதிட்டார்.

45 நாள் காலக்கெடு முக்கியமானது

எனினும், தேர்தல் வழக்குகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய வேண்டிய சட்ட நடைமுறையும் இந்த வழக்கில் முக்கியத்துவம் பெற்றது. தேர்தல் முடிவு வெளியான45 நாட்களுக்குள்தேர்தல் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், அந்த காலக்கெடுவுக்குள் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தவெகவுக்கு அரசியல் ரீதியாக சாதகமா?

ஸ்டாலினின் கொளத்தூர் தோல்வி தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக, தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் ஸ்டாலினின் தோல்வியை அரசியல் ரீதியாக விமர்சித்து வருகின்றனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு வி.எஸ்.பாபு செய்த சைகையும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, மீம் விவாதங்களுக்கு வழிவகுத்தது.

இந்த சூழலில், வி.எஸ்.பாபுவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது தவெகவுக்கு அரசியல் ரீதியாக சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

திமுகவுக்கு தொடரும் பின்னடைவு?

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை திமுகவுக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவாக தவெக தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில், சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு, தூய்மை பணியாளர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சியாக திமுக தீவிரமாக செயல்பட வேண்டிய நிலையில், தேர்தல் தோல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தேவையற்ற கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.


மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் தோல்வியை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது சரியா என்ற கேள்வியையும் விமர்சகர்கள் எழுப்புகின்றனர். இருப்பினும், தேர்தல்முறைகேடுகள் தொடர்பாக சட்ட ரீதியான தீர்வை நாடுவது ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றிக்கு எதிராக ஸ்டாலின் தரப்பில் தொடரப்பட்ட சட்டப் போராட்டத்தில் முக்கிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil