தநா 2026, விஜய்: உமாபதி ராமையா இயக்கியிருக்கும் தநா 2026 படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் வெளியான அந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த அனைவரும் இது தவெக தலைவர் விஜய்யை நக்கல் செய்து எடுக்கப்பட்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.
உமாபதி பட ஹீரோவாக நடித்திருக்கும் நட்டி, சினிமா கெரியரின் உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வருகிறார். நான் கெரியரின் உச்சத்தில் அதை விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்று அடிக்கடி கூறி வருகிறார் விஜய். அதனால் விஜய்யாக நடித்திருக்கிறார் நட்டி என்று மக்கள் நம்புகிறார்கள்.
அது மட்டும் இல்லை நட்டி அணிந்திருந்த பேண்ட், சட்டை விஜய்யை நினைவூட்டுகிறது. அவரின் ஹேர்ஸ்டைல், சால்ட் அன்ட் பெப்பர் தாடி, அமைதியான முகம், நடந்து வரும் விதம், கையைசைக்கும் ஸ்டைல் என அனைத்தும் விஜய் மாதிரியே இருக்கிறது. தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார் விஜய். இந்த நேரத்தில் போய் அவரை கலாய்த்து படம் ரிலீஸானால் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைத்துவிடும் என்று பேசப்படுகிறது.
அது விஜய் கிடையாது: இந்நிலையில் தங்களின் தநா 2026 படத்தில் வரும் கதாபாத்திரம் விஜய் இல்லை என்று தெரிவித்துள்ளார் உமாபதி ராமையா. 50 வயதுக்கு மேலாகிவிட்டால் ஹீரோக்கள் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிவிடுகிறார்கள். எங்கள் படத்திற்கான லுக் டெஸ்ட்டை முன்பே நடத்தினோம். மேலும் அந்த உடை தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது என்கிறார் உமாபதி.
விஜய் சார் ரசிகன், அவரை பார்த்து டான்ஸ் ஆட ஆரம்பித்த நான் போய் அவரை கலாய்ப்பேனா என்று மேலும் தெரிவித்திருக்கிறார். அந்த உடை விஜய் அணியும் உடை இல்லை என்ற அவர், வேறு ஒரு மாநிலத்தில் தலைவர் ஒருவர் அதே உடை தான் அணிகிறார். அதை தான் எங்கள் படத்தில் சேர்த்தோம் என்று உறுதியாக கூறியிருக்கிறார் உமாபதி ராமையா.
விஜய் சார் ஒரு சிங்கம். அவரை யாராலும் Defame பண்ண முடியாது என்று உமாபதி தெரிவித்தது தான் விஜய் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. உமாபதி சொன்னதை கேட்ட நட்டியோ, நிஜமாகவே அவர் ஒரு சிங்கம். அவரை அவமதிக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. விஜய் சாரை அருகில் இருந்து பார்த்தவன் நான் என்றார்.
தம்பி ராமையா உறுதி: தநா 2026 படத்திற்கு கதை எழுதிய தம்பி ராமையா கூறியதாவது, டீஸரை மட்டும் பார்த்து எதுவும் முடிவு செய்ய வேண்டாம். எங்கள் படத்தில் தவெகவை தாக்கவில்லை. படம் ரிலீஸான பிறகு உங்களுக்கு தெரியும். நான் விஜய்யுடன் சேர்ந்து மூன்று படத்தில் வேலை செய்திருக்கிறேன். நட்டியோ விஜய்யின் யூத் மற்றும் புலி படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். எங்கள் படத்தில் விஜய்யை விமர்சிக்கவில்லை என்றார்.
தநா 2026 படத்தில் நட்டியும், இளம் பெண்ணும் பீச்சில் வாக்கிங் சென்ற காட்சியை பார்த்தவர்களோ, இது விஜய்ணாவா இல்லை வேறு யாராவதா என்று கேட்கிறார்கள். அந்த பெண்ணின் ஹேர்ஸ்டைலை பார்த்தால் வேறு ஒரு ஜோடி நினைவுக்கு வருகிறது. ஆக விஜய்ணாவை மட்டும் அல்ல அந்த நபரையும் கலாய்த்திருக்கிறார்கள் போன்று என்று பேசப்படுகிறது. தம்பி ராமையா, உமாபதி, நட்டி தெரிவித்த விளக்கத்தை அடுத்து தநா 2026 படம் பார்த்து அதில் யாரை கலாய்த்திருக்கிறார்கள் என்பதை உடனே தெரிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

