சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியான சமயத்தில் அதிகம் பேசுபொருளானது செந்தில் பாலாஜியின் பெயர் தான்.
கரூர் எம்எல்ஏவான அவர் கோவையில் தொகுதி மாறி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதி மாற்றத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்தது. இந்நிலையில் கரூர் தொகுதி வெற்றி வாய்ப்பு பற்றி அவர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை தொகுதி
கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் கோவையில் பத்து தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை திமுக இழந்தது. இதன் காரணமாக இந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் திமுக அதிக கவனம் செலுத்துகிறது. இதனை தொடர்ந்தே அவர் கோவை தொகுதியில் போட்டியிட உள்ளார். செந்தில் பாலாஜி அங்கு போட்டியிடுவதால் கோவை நிர்வாகிகளுக்கு ஒரு தன்னம்பிக்கையும், தைரியமும் கிடைக்கும் என்பதற்காக அவரை முதல்வர் ஸ்டாலின் அங்கு அனுப்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜி
இதனிடையில் செந்தில் பாலாஜி கோவைக்கு சென்றுள்ள நிலையில், கரூரில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள செந்தில் பாலாஜி, கரூரில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். அதாவது கரூரில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு பேசியவர், "கரூரில் நான்கு தொகுகளிலும் கடந்த முறை போல் உதயசூரியன் மகத்தான வெற்றி பெறும் என்றார்.
கரூரில் திமுக வெற்றி
தொடர்ந்து இபிஎஸ் குறித்து பேசுகையில், எதிர்கட்சி தலைவர் தோல்வியின் வெளிப்பாடாக விரக்தியின் உச்சத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. யார் என்ன வேணாலும் சொன்னாலும், கரூரில் நான்கு தொகுதிகளிலும் திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என உறுதியாக தெரிவித்துள்ளார். நம்ம எல்லாரும் இங்கதான் இருக்கோம். வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது எனவும் கூறியுள்ளார் செந்தில் பாலாஜி.
தொகுதி மாறி போட்டி
இதனிடையில் செந்தில் பாலாஜி கொங்கு மண்டல பொறுப்பாளராக நியமித்த பிறகு கோவையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதோடு பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றிவாகை சூடியது. இதற்கு முக்கிய காரணம் செந்தில் பாலாஜி என கூறப்பட்டது. இதனையடுத்து தற்போது சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட உள்ளார். இதன் காரணமாக அங்கு இந்த தடவை திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொங்கு மண்டலம்
செந்தில் பாலாஜியும் கொங்கு மண்டலத்தில் கடந்த முறையை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இதனிடையில் சமீபத்தில் கோவையில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, நினைத்ததை சாதித்து காட்டுபவர் செந்தில் பாலாஜி. எந்த வேலை கொடுத்தாலும் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்வார். அதனால் தான் தற்போது கோவையில் போட்டியிடுகிறார் என தெரிவித்திருந்தார்.
அண்ணாமலைக்கு சீட் மறுப்பு
இதனிடையில் கோவையில் அண்ணாமலை ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு பெரிதும் முயற்சி செய்தார். ஆனால் நேற்றைய தினம் வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை. அண்ணாமலையும் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கட்சி தலைமையிடம் சில நாட்களுக்கு முன்னதாக சொல்லிவிட்டதாக விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது குறித்து, 'மற்ற அரசியல் கட்சிகள் குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது' என செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

