Friday, 16 Oct, 4.06 am சர்வம் News

அரசியல்
அட! தி.மு.க. ஒரு கட்சியில்லப்பா, அது கந்து வட்டிக்கடைதான்: சீவித்தள்ளியை சிறைத்துறை அமைச்சர்!!

தேர்தல் நெருங்க, நெருங்க தி.மு.க. மீதான அ.தி.மு.க.வின் விமர்சன தாக்குதலும், அழுத்தமும் அதிகமாகிக் கொண்டே போகிறது. தி.மு.க.வை ஒரு இன்ச் கூட இங்குமங்குமாய் நகர விட மறுக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதில் தவறொன்றுமில்லைதான். காரணம், அற்ப அரசியலுக்காக வதந்திகளையும், பொய் தகவல்களையும் பெரிய அளவில் ஊதி ஊதி பெரிதாக்குவதே தி.மு.க.வின் பிழைப்பாகிவிட்டது.

கொடூரமான கொரோனா காலம் என்று கூட பாராமல் தமிழக முதல்வர் எடப்பாடியார் தரையிறங்கி மக்கள்பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதைமனதில் வைக்காமல் பொறுப்பற்ற நிலையில் இருக்கிறது எதிர்க்கட்சியான தி.மு.க. மக்களுக்கு உதவுகின்றன, சேவை செய்கின்ற, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற கடமை தங்களுக்கு இருப்பதை கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்துவிட்டு, தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் எனும் கண்ணோட்டத்தோடே செயல்படுகிறது தி.மு.க. இதற்காக எந்த வதந்தியையும், பொய்யையும் கிளப்பிவிடுவதற்கு அக்கட்சி தயாராக உள்ளது.

இதனால்தான் பார்க்கும் இடமெல்லாம் தி.மு.க.வை விமர்சனங்களால் துரத்தி துரத்தி வெளுக்கிறது அ.தி.மு.க. அந்த வகையில், சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம், விழுப்புரத்தில் நடந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது ' மிக விரைவில் தேர்தலை சந்திக்க இருக்கிறது தமிழகம். கடந்த இரண்டு முறையாக நம் கழகத்தின் கையில்தான் ஆட்சிப் பொறுப்பை கொடுத்துள்ளனர் தமிழர்கள். எதிர்வரும் தேர்தலின் முடிவிலும் நம்மிடமே அதை தரும் முடிவிலுள்ளனர். இதற்கு காரணம் பத்து ஆண்டுகளாக அம்மாவின் அரசு செய்திருக்கும் அருமையான நிர்வாகம் தான்.

ஆனால், ஆட்சியைப் பிடிக்க துடிக்கிறார் ஸ்டாலின். முதல்வர் பதவியில் வந்தமரும் வெறியில் இருக்கிறார். ஆனால் அதற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா? என்றால் இல்லை, இல்லவே இல்லை! என்பதே உண்மை. தி.மு.க.வினர் ஒரு குடும்ப கட்சி. வாரிசு இயக்கம்தான் அது. கவர்ச்சிகரமான பொய் திட்டங்களை கூறி மக்களை திசை திருப்ப முயல்வதுதான் அவர்களின் அரசியலே தவிர வேறொன்றுமில்லை.

கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு ஆகியவை தி.மு.க. கும்பலின் முக்கிய நோக்கம். அது ஏஜெண்ட் அரசியல் கட்சி. இன்னும் ஷார்ப்பாக சொல்வதென்றால் தி.மு.க. ஒரு கட்சியே அல்ல, கந்து வட்டிக் கடை. ஏனென்றால் கொள்கையை அடிப்படையாக வைத்து அங்கே எதுவும் நடக்காது. பணத்தை மையமாக வைத்து மட்டுமேதான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். கட்சிப் பதவிக்கு பணம், தேர்தலில் சீட்டுக்கும் பணம், அமைச்சராக வேண்டுமென்றாலும் பணம். எல்லாவற்றுக்குமே பணம் பணம் பணம்.

ஆனால் கழகத்தினரின் உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். நமது இயக்கம் வரும் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறத்தான் போகிறது. இதை சாத்தியப்படுத்தும் பொறுப்பு நம் கழகத்தின் பாசறை நிர்வாகிகளின் கையில்தான் இருக்கிறது. அவர்கள்தான் கட்சியை அடுத்த தலைமுறைக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

தி.மு.க.வை பற்றி கவலைப்படாதீர்கள். அது பழுத்து, பாதி காய்ந்த இலை. கூடிய விரைவில் சருகாகி, கீழே உதிர்ந்துவிடும்.' என்று போட்டுப் பொளந்துள்ளார்.

மாஸ் தாக்குதல்!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top