Tuesday, 22 Sep, 1.12 pm சர்வம் News

அரசியல்
எடப்பாடியாரை வேண்டுமென்றே சீண்டினார் பிரேமலதா: ஆளுங்கட்சி கூட்டணியில் அதிரடி பிளவு

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது தே.மு.தி.க. ஜெயலலிதா முதல்வராய் அமர, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். ஆனால் சில காலத்திலேயே இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் மோதல் உருவாகி, இனி தே.மு.தி.க.வுக்கு எழுச்சியே கிடையாது. சரிவுதான் என்று சாபமிட்டார் ஜெயலலிதா. அது பலிக்கத்தான் செய்தது. அதன் பின் தே.மு.தி.க. கடும் தோல்விகளை மட்டுமே சந்தித்து, அதன் வாக்கு வங்கி சதவீதமும் வெகுவாய் குறைந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் உருவானது. அதன்மூலம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து அ.தி.மு..க.வுடன் கூட்டணியில் இருக்கிறது தே.மு.தி.க. பிரசாரத்தின் போதே தெளிவற்ற நிலையில் மனம் போன போக்கில் சில வார்த்தைகளை பேசி, கூட்டணிக்குச் சிக்கலை உண்டாக்கினார் பிரேமலதா. ஆனால் எடப்பாடியார் அதை பெரிய மனதுடன் மன்னித்தார். இந்நிலையில் இப்போது தேவையில்லாமல் அ.தி.மு.க.வின் உள் விஷயங்கள் குறித்துச் சில வார்த்தைகளைப் பேசி சீண்டியிருக்கிறார் பிரேமலதா.

இதற்கு அவருக்கு எச்சரிக்கை தொனியில் பதில் சொல்லியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பிரேமலதா தங்கள் கட்சி விஷயங்கள், விவகாரங்கள், பிரச்னைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொள்வது நல்லது.

அதுதான் ஆரோக்கியமான முறையும் கூட. அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களில் அவர் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க.வில் அமைச்சர்களை நியமித்தது புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தானே தவிர சசிகலா இல்லை. அமைச்சரவை விஷயத்தில் சசிகலாவின் பங்கு என்றும் இருந்ததில்லை, இது என்ன புதுக்கதையாக பேசுகிறார் பிரேமலதா.

எம்.எல்.ஏ.க்கள்தான் முதல்வரை தேர்வு செய்தோம். எங்கள் இயக்கத்தில் எந்த சலசலப்பும் இல்லை. என்று அதிரடியாய்க் கூறியுள்ளார்.

இதன் மூலம் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணியில் பிளவு உருவாகியிருப்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தங்களுக்கு ஒதுக்கிய சீட்களில் பிரேமலதாவுக்கு திருப்தி இல்லை, ராஜ்யசபா சீட்டும் தராமல் ஏமாற்றிவிட்டார்கள். எனவே எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தாவிவிடும் எண்ணத்தில் இருக்கிறார் பிரேமா. அதை மனதில் வைத்துத்தான் வேண்டுமென்றே ஆளுங்கட்சியை சீண்டியிருக்கிறார். இதன் மூலம் உருவாகும் பிரச்னையின் அடிப்படையில் தே.மு.தி.க. தன் முகாமை மாற்றும்! என்கிறார்கள் பார்வையாளர்கள்.

ஆனால் அதேவேளையில் கடந்த 2016 தேர்தலில் நம்ம கட்சியை உடைச்சு, காலி பண்ணிய ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் போய் சேருவது கேப்டனின் சுயமரியாதைக்கு இழுக்கு. என்று தே.மு.தி.க.வின் நிர்வாகிகள் பாவம்போல் கூறி வருகின்றனர்.

இதெல்லாம் பிரேமலதாவின் கவனத்தில் விழவா போகுது?

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top