Tuesday, 22 Sep, 4.37 pm சர்வம் News

அரசியல்
துரைமுருகனால் துன்பத்தில் சிக்கும் ஸ்டாலின்: கடுப்பில் கட்சியினர்! களிப்பில் அ.தி.மு.க.

ஏன்டா இந்த துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தோம்? என்று ஸ்டாலினே நொந்து நூலாகுமளவுக்கு விவகாரங்கள் அவர் கட்சிக்குள் வெடிக்கத் துவங்கிவிட்டன. ஆனால் இதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சித்தர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருக்கிறார் மிஸ்டர் துரை.

நான் அரசியல் ஆசாபாசங்களுக்கு அப்பாற்ப்பட்டவன். எந்தப் பதவியையும் எதிர்பார்த்து இந்த இயக்கத்தில் இல்லை. இரு வண்ணக் கொடியை ஏந்தியபடி! கடைசித் தொண்டனாக நடந்திடவும் தயார். என்று கூறினார் துரைமுருகன். இப்படி அவர் கூறியது தி.மு.க.வில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கும் முன்பாக. ஆனால் அதன் பின் எல்லாம் மாறியது. யாரும் எதித்துப் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டார். துரைமுருகனுக்கு கழகப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதில் தி.மு.க.வின் பல்லாயிரக்கணக்கானோருக்கு துளியும் விருப்பமில்லை. பல வருடங்களாக கட்சியில் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், அமைச்சர், பொருளாளர் என்று பல பதவிகளில் இருந்து அதிகாரத்தை அனுபவித்தும், சம்பாதித்துக் கொட்டியும் சளைத்தவருக்கே இந்த உச்ச பதவியா? என்று குமுறினர்.

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆன பின் முதல் முறையாக தனது சொந்த தொகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு வந்தார் துரைமுருகன். அப்போது நிருபர்கள் அவரிடம் பல கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

அதற்கு பதில் சொல்ல திணறிய துரைமுருகன் என்னோடு பத்திரிக்கையாளர்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது. தொடர்ந்து நீங்கள் என்னை ஆதரிக்க வேண்டும். என்னை தாக்கும் கேள்விகள் கேட்டு, மனதைப் புண்படுத்த வேண்டாம். இரண்டொரு நாட்கள் கழித்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்கிறேன்! என்றபடி எஸ்கேப் ஆகிவிட்டார், வழக்கம்போல் ரெண்டு சொட்டு கண்ணீரும் விட்டிருக்கிறார்.

துரைமுருகனின் இந்த செயலுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன தி.மு.க.வினர் மத்தியில். தன்னிடம் உண்மை இருந்தால் ஏன் இப்படி பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பிட வேண்டும்? பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு வெளிப்படையாக தேர்தலை நடத்தியிருக்க வேண்டிதானே! ஒரேயொரு விண்ணப்பத்தை மட்டும் அவரிடம் கொடுத்துவிட்டு, மற்றவர்கள் போட்டியிட வேண்டாம்! அதாவது கூடாது, என்று தலைமை தடைபோட வேண்டிய அவசியமென்ன? உட்கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஏன் இப்படியான நபர்களை ஸ்டாலின் வளர்த்துவிடுகிறார்? என்று பொங்கியுள்ளன.

ஆக துரைமுருகன் மீது தி.மு.க.வினருக்கு எழுந்திருக்கும் இந்த கோபமானது ஸ்டாலினையும் சேர்த்தே பதம் பார்க்கும்! என்பதில் டவுட்டே இல்லை.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top