Wednesday, 23 Sep, 11.39 am சர்வம் News

அரசியல்
உங்க ஆட்டம் தமிழ்நாட்டில் செல்லாது: பா.ஜ.க.வை உலுக்கும் தி.மு.க.

தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கு இடையில்தான் போட்டி இருக்குமே தவிர, அ.தி.மு.க. ஸீனிலேயே இருக்காது! என்று ஒரு புதிய பிரசாரத்தை தி.மு.க. கிளப்பிவிட்டுள்ளது.

இதை அ.தி.மு.க. வன்மையாக எதிர்த்து வரும் வேளையில், ஆஹா நம்மளை ஆளுங்கட்சியை விட ரொம்ப பலமான ஆளாக சுட்டிக்காட்டி சண்டைக்கு இழுக்குறாங்களே. என்று மனசார தி.மு.க.வுக்கு நன்றி சொல்லிவிட்டு, அரசியல் தர்மப்படி சண்டையையும் துவக்கியுள்ளது தமிழக பா.ஜ.க.

தி.மு.க.வை திட்டுவதில் துடியாய் நிற்பவர் தமிழக பா.ஜ.க.வின் புதிய துணைத்தலைவரான மாஜி ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலைதான். நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் கோஷ்டி நடத்தும் ரெட்டை வேடத்தை தாரை தப்பட்டைக் கிழியக் கிழிய தோலுரித்துக் காண்பிக்கிறார். நீட் தேர்வினை இந்தியாவுக்குள் கொண்டு வந்ததே தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்த பின்னரும் கூட, அதை மறைத்து அரசியல் செய்வது அவலம், அருவருப்பு. என்று முழங்கிக் கொட்டியிருக்கிறார்.

அவருக்கு அடுத்து இப்போது தமிழக பா.ஜ.க.வின் தலைவர் முருகனும் அந்த மேளாவில் இணைந்து கொண்டுள்ளார். அவரும் ஸ்டாலினை வாரியெடுத்து வகுந்து வருகிறார் தினம் தினம். அந்த வகையில், மத்திய அரசு கொண்டு வரும் விவசாய மசோதா விஷயத்துக்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பிரச்னை பண்ணுவது குறித்து மிகப்பெரிய ஆதங்கத்தில் இருக்கிறார் மனிதர்.

இது பற்றிக் கடினமாக பேசியிருக்கும் அவர் பாரதிய ஜனதா அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதை எதிர்க்க வேண்டும் என்று கண்மூடித்தனமாக அறிக்கை விடும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இந்த விவசாய மசோதா விவகாரத்திலும் கண்டனம் தெரிவிப்பதை மிக வன்மையாக கண்டிக்கிறேன். என்று பொங்கியுள்ளார்.

ஆனால் இதற்குப் பதிலடி கொடுக்கும் தி.மு.க. தரப்போ நீங்க மக்களுக்கு நல்லது செய்கிற திட்டங்களைக் கொண்டுவந்தால் நாங்க ஏன் எதிர்க்கிறோம்? முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளை வாழ வைக்கிற வேலையை நீங்க பண்ணினால், சாதாரண மக்களின் வாழ்க்கை அடிபட்டுப் போகுதே. அதை எப்படி அனுமதிக்க முடியும். உங்க ஆட்டமெல்லாம் தமிழ்நாட்டில் எந்த காலத்துலேயும் செல்லாது. என்று உலுக்கியெடுத்துள்ளனர் பாய்ந்து.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top