Wednesday, 23 Sep, 11.52 am சர்வம் News

அரசியல்
வெற்றி! வெற்றி!ன்னு வடிவேலு மாதிரி குதிக்காதீங்க டுபாக்கூர்களா: தி.மு.க.வை சாடும் அ.தி.மு.க.

தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சியாக இருக்கும் இயக்கம்தான் அதிகமாக விமர்சனத்துக்கும், தாக்குதல்களுக்கும், அலசல்களுக்கும் உள்ளாகும். ஆனால் ஏனோ தெரியவில்லை எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்த முறை மிக மோசமான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது தி.மு.க.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இப்படி அக்கட்சி தாக்கப்படுகிறது என்று சொல்லிவிட முடியாது. காரணம், அந்த கட்சியின் செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கிறது. தனக்கென ஒரு குறுகிய வட்டத்தினை வைத்துக் கொண்டு, பெரும்பான்மையை அக்கட்சி மனசாட்சியே இல்லாமல் தாக்குவதன் விளைவே இது! என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அந்த வகையில்தான் தற்போதைய ஆன்லைன் உறுப்பினர் சேர்ப்பு விஷய முறைகேடும் அமைந்துள்ளது.

இப்போது ஆன்லைனில் உறுப்பினர் சேர்ப்பதிலும் முறைகேடுகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது தி.மு.க.! என்கிறார்கள். அதாவது சுடலை எனும் பெயரில் ஸ்டாலினின் போட்டோவை அப்லோடு செய்து அவருக்கே உறுப்பினர் கார்டு அப்ரூவலானது அக்கட்சியின் இணைய தளத்தில். அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் கார்டு கொடுத்தனர். கருணாநிதிக்கும் கொடுத்தனர், கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவரது மகன் மு.க. அழகிரிக்கும் உறுப்பினர் கார்டு கொடுத்துள்ளனர். இப்படி எந்த கண்காணிப்பும், விசாரணையும், தேர்ந்தெடுத்தலும் இல்லாமல் சகட்டுமேனிக்கு உறுப்பினர் சேர்ப்பும், அதில் தில்லாலங்கடிகளும் நடக்கின்றன.

ஏற்கனவே உறுப்பினராக உள்ள பலர் மீண்டும் தங்களுக்கு இந்த ஆன்லைன் முகாம் மூலம் உறுப்பினர் கார்டை வாங்கிக் கொள்கின்றனர். இதன் மூலம் தங்கள் கட்சியில் அதிகம் பேர் இணைந்து வருவதாக போலியாக ஒரு பரபரப்பை கிளப்பும் எண்ணம்தான். எதிர்பார்த்தது போலவே தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் எங்கள் இயக்கத்தில் ஆன்லைன் பதிவு மூலம் லட்சக்கணக்கில் ஆட்கள் சேர்கிறார்கள். என்று தம்பட்டம் அடிக்கின்றனர் போலியாக.

திருமயம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதியும் ஒரே நாளில் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்த்த இயக்கம் தி.மு.க. மட்டுமே. மற்ற இயக்கங்களைப் போல உறுப்பினர்களைப் போலியாக சேர்ப்பது இல்லை. என்று கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு ஆளுங்கட்சி தரப்போ முறையாக இந்த உறுப்பினர் சேர்க்கையை நீங்கள் நடத்தி, அதில் ஒருவர் உறுப்பினராக சேர்ந்திருந்தாலும் அதை பெருமையாக எடுக்கலாம். ஆனால் பார்ப்பதெல்லாம் டுபாக்கூர் வேலை. அதன் பின் வெற்றி வெற்றின்னு வடிவேலு மாதிரி கூச்சல் போடுறது அசிங்கம். என்று தாக்குகின்றனர்.

இவங்க பஞ்சாயத்து இப்போதைக்கு தீராது போல!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top