Dailyhunt
கார்மேனி செல்வம் - விமர்சனம்

கார்மேனி செல்வம் - விமர்சனம்

screen4screen 2 weeks ago

டுத்தர வர்க்க குடும்பங்களின் ஆசைகள், ஏமாற்றங்கள் மற்றும் நிம்மதியை இழக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை எதார்த்தமாகப் பதிவு செய்யும் ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்'.

இயக்குநர் ராம் சக்ரி, "இருப்பதை வைத்து நிறைவாக வாழ்வதே உண்மையான செல்வம்" என்ற ஆழமான செய்தியை அழுத்தமாகச் சொல்லும் வகையில், சராசரி மனிதர்களின் கனவுகளையும் அதன் விளைவுகளையும் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். கார் ஓட்டுநரின் வாழ்க்கை வழியாக நம் சமூகத்தின் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மிக நெருக்கமாகக் காட்டும் படம் இது.

கார் ஓட்டுநராக பணியாற்றும் சமுத்திரக்கனி, மனைவி லட்சுமி பிரியா சந்திரமெளலி மற்றும் மகன் உடன் அளவான வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் சொந்த வீடு, சொந்த கார் என்ற ஆசை அவரை கடன் வட்டத்தில் சிக்க வைக்கிறது. ஆசையை நிறைவேற்றும் பேரில் அவசரக் கடன்களில் சிக்கி, படிப்படியாக பெரும் நெருக்கடிக்கு ஆளாகிறார். அந்தச் சிக்கலில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, தேவையற்ற ஆசைகளால் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் நடுத்தரக் குடும்பங்களின் கதையாக சொல்வதே 'கார்மேனி செல்வம்'.

இருப்பதை வைத்து திருப்தியாக வாழாமல், இன்னும் இன்னும் என்று தேடி வாழ்க்கையையே இழந்துவிடக் கூடாது என்பதை உறுதியாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராம் சக்ரி, ஒரு சாதாரணக் குடும்பத்தின் கனவுகளையும் அதனால் வரும் இன்னல்களையும் மிக யதார்த்தமாகக் காட்டி பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறார்.

சமுத்திரக்கனி என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, எளிய மனிதனின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், உள்மனப் போராட்டம், இயலாமை என அத்தனை உணர்வுகளையும் தன் அனுபவமிக்க நடிப்பால் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதை உயிரோட்டமாக்கும் அவரது திறன் இந்தப் படத்திலும் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.

அவருக்கு நிகராக அசத்தியிருக்கிறார் மனைவி பாத்திரத்தில் லட்சுமி பிரியா சந்திரமெளலி. நடுத்தர வர்க்கப் பெண்களின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றை கண்களின் வழியாகவே அழகாகக் கடத்தியிருக்கிறார். "ஆசையை விட அமைதியான வாழ்க்கையே போதும்" என்ற தன் மனநிலையை கணவருக்கு உணர்த்தும் காட்சிகளில் அவர் கொடுத்த நடிப்பு படத்துக்கு மிகப் பெரிய பலம் சேர்த்துள்ளது.

சமுத்திரக்கனியின் முதலாளியாக கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக அபிநயா, மகனாக சிறுவன் கரண் சக்கரவர்த்தி ஆகியோரும் தங்கள் பாத்திரங்களுக்கு சரியான நியாயத்தைச் செய்து திரைக்கதையின் ஓட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

நெரிசல் மிக்க நகரத்தின் வேகமான வாழ்க்கையையும், அதிலிருந்து சற்று தள்ளி அமைதியாக இருக்கும் நாயகனின் குடியிருப்பையும் அழகிய காட்சிகளாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன். மனிதர்களின் அவசரமான வாழ்க்கைக்கும், அதில் ரசிக்க மறந்த அமைதிக்கும் இடையிலான அழகிய வேறுபாட்டை அவர் காட்சிகளில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜியின் இசை, பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை கதைக்கு ஏற்றவாறு சென்று படத்துக்கு கூடுதல் ஆழத்தை அளித்திருக்கின்றன. ஜெகன்.ஆர்.வி மற்றும் தினேஷ்.எஸ் ஆகியோரின் படத்தொகுப்பும், சங்கரின் கலை இயக்கமும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளன.

"நம்மிடம் இருப்பதை வைத்து வாழ வேண்டும்; பிறரிடம் இருப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு அவதிப்படக் கூடாது" என்ற செய்தியை அழுத்தமாகச் சொல்லும் இந்தப் படம், குடும்பத்துக்காக பணம் தேடுகிறோம் எனும் பெயரில் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதையே மறந்துவிடக் கூடாது என்று வெளிநாட்டில் பணியாற்றும் தமிழர்களுக்கும் மெல்லிய அறிவுரை சொல்கிறது.

திரைக்கதை சற்று மெதுவாக நகர்வது, சில கதாபாத்திரங்கள் எதார்த்தத்துக்கு சற்று மேலாக வடிவமைக்கப்பட்டிருப்பது போன்ற சிறு குறைகள் இருந்தாலும், தேவையற்ற ஆசைகளால் நிம்மதியை இழக்கும் மக்களுக்கு வலிமையான பாடத்தைச் சொல்லும் ராம் சக்ரியின் முயற்சி, அந்தக் குறைகளை மறைத்துவிட்டு படத்தின் நல்ல அம்சங்களை மக்கள் மனதில் நீண்ட நாட்கள் நிலைநிறுத்துகிறது.

மொத்தத்தில், 'கார்மேனி செல்வம்' ஒரு சிந்தனைக்குரிய குடும்பப் படம். வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைத் தேடும் அனைவருக்கும் பரிந்துரைக்கத் தக்க திரைப்படம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: screen4screen