Dailyhunt
2026-ல் கூட்டணி ஆட்சி தான் வரும்! அன்றே கணித்த அண்ணாமலை! 2026 தேர்தலில் வீசிய விஜய் அலை!

2026-ல் கூட்டணி ஆட்சி தான் வரும்! அன்றே கணித்த அண்ணாமலை! 2026 தேர்தலில் வீசிய விஜய் அலை!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

பல தசாப்தங்களாக திமுக - அதிமுக என்ற இரு திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த சூழலில், இந்த முறை புதிய அரசியல் சக்தியாக தவெக எழுச்சி பெற்றிருப்பது முக்கிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த 2024ஆம் ஆண்டு கூறிய அரசியல் கணிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும்" என்று அவர் அப்போது கூறியிருந்த வீடியோவை அவரது ஆதரவாளர்கள் தற்போது அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

2024 பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, "2024 - 2026 அரசியல் சூழ்நிலையை பார்த்தால், எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும். 2021 மாதிரி ஒரு கட்சிக்கு 150, 160 இடங்கள் கிடைக்கும் காலம் முடிந்து விட்டது" என்று தெரிவித்திருந்தார்.

மேலும், "பாஜக முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து, நீண்ட காலம் களத்தில் வேலை செய்தால், 2026 பாஜகவின் காலமாக இருக்கும்" என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், நடைமுறையில் பாஜக வேட்பாளர்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டதால், கட்சி பெரும் வெற்றியைப் பெற முடியவில்லை என்பது தற்போது பேசப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகத்துக்கு ஆட்சி அமைக்க இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பின்னணியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், ஆளுநர் விஜய்யை முதல்வராக அழைத்து, பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் அடுத்த சில நாட்களில் இன்னும் பரபரப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை கூறிய "கூட்டணி ஆட்சி" குறித்த கணிப்பு தற்போதைய சூழலுடன் பொருந்தி இருப்பதால், அவரது பழைய பேச்சு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக அரசியல் தற்போது புதிய கூட்டணிகள், புதிய அதிகார சமநிலைகள் மற்றும் எதிர்பாராத நகர்வுகளின் கட்டத்துக்குள் நுழைந்துள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal