தமிழ்நாடு பிராமணர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், "1980 முதல் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சேவை செய்து வருகின்ற தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) தற்போது 400க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது.
எங்களது சங்கத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக 3500 பேர் உள்ளனர். (இவர்கள் மாநில, மாவட்டங்கள் மற்றும் கிளைகளின் நிர்வாகிகள் ஆவர்).
நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தல் பற்றிய எங்களது சங்கத்தினரிடையேயான கருத்துக் கேட்பு, எழுத்து வழியாகவும், எங்களது சமூக ஊடகங்கள் வழியாகவும் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்திட வேண்டும் என்று தாம்ப்ராஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த அடிப்படையில் 23-04-2026 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் எங்களது சங்கம், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக எங்களது வாக்கு வங்கியினை உருவாக்குவதில் முனைந்து செயலாற்றி தற்போது வெற்றி பெற்றுள்ளோம். பல தொகுதிகளில் எங்களது வாக்குகள் தேர்தல் முடிவினை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு ஆற்றிடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

