செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்க உள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த ஹிண்ட்களை விஜய் டிவி புரோமோக்கள் மூலம் வெளியிட்டு வரும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் என்பதை நெட்டிசன்கள் டீகோட் செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்த சீசனில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.
அதன்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடித்த லட்சுமி ப்ரியா பிக் பாஸ் சீசன் 10ல் போட்டியாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாநதி சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி, இந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், சீரியல் முடிந்த கையோடு லட்சுமி ப்ரியா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு புதிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதேபோல், விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நவீனின் பெயரும் போட்டியாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சின்ன மருமகள் சீரியல் தொடங்கியபோது அதன் புரமோஷனுக்காக பங்கேற்ற நவீன், தற்போது அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நவீன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் சின்ன மருமகள் சீரியலில் அவரது கதாபாத்திரம் எப்படி கையாளப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இடம்பெற்று வரும் டாலியும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் பரவி வருகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த டாலி, சுனிதாவைப் போலவே விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். சுனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், டாலி இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்களின் மனதை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த சீசனில் புதிய முயற்சியாக பொதுமக்களில் இருந்தும் சிலரை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நடத்தப்பட்ட காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து கரிஷ்மா, முனியம்மா மற்றும் ஜேசன் ஆகிய மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் முனியம்மா மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரது என்ட்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் லட்சுமி ப்ரியா, நவீன், டாலி, கரிஷ்மா, முனியம்மா மற்றும் ஜேசன் என பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 10ல் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இவை அனைத்தும் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் மட்டுமே என்பதால், போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் நிகழ்ச்சி தொடங்கும்போதுதான் உறுதியாக தெரியவரும்.
Seithi Punal
