Dailyhunt
பொதுவெளியில் மது அருந்தியவர்களை கண்டித்ததால் விபரீதம்..! - மீனவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்...!

பொதுவெளியில் மது அருந்தியவர்களை கண்டித்ததால் விபரீதம்..! - மீனவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்...!

தூத்துக்குடி அருகே கீழவைப்பார் பகுதியைச் சேர்ந்த இருதயராஜின் மகன் ஜாய்விக்டோரியன் (32), மீனவராக வாழ்ந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, திரேஸ்புரம் குடியிருப்பு பகுதியில் வழக்கம்போல் நடந்து சென்றுகொண்டிருந்த அவர், அங்குள்ள ஒரு ஒதுக்குப்புற இடத்தில் இருவர் மது அருந்திக் கொண்டிருப்பதை கவனித்தார்.

பொது இடத்தில் மது அருந்துவதை எதிர்த்து, அந்த இருவரையும் கண்டித்த ஜாய்விக்டோரியன், அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் சில நிமிடங்களில் கடும் மோதலாக மாறியது.ஆத்திரம் தணியாத அந்த மர்ம நபர்கள், தங்களிடம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜாய்விக்டோரியனை குறிவைத்து கொடூரமாக தாக்கினர்.

பலத்த காயங்களால் ரத்தக் குளத்தில் துடித்த அவர், சில நொடிகளில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஜாய்விக்டோரியனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக ஜாய்விக்டோரியன் அளித்த புகாரின் பேரில், வடபாகம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய இரு நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.பொது அமைதியை குலைக்கும் வகையில் இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரேஸ்புரம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal