Dailyhunt
எடப்பாடி பழனிசாமியுடன் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் சந்திப்பு: உறுதியாகிறதா அதிமுக - தவெக கூட்டணி?

எடப்பாடி பழனிசாமியுடன் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் சந்திப்பு: உறுதியாகிறதா அதிமுக - தவெக கூட்டணி?

மிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.

108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தேவையான 10 இடங்களை ஈடுகட்டப் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முன்னதாகக் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிரடித் திருப்பமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்றதாகத் தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏற்கனவே ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி நேரம் கேட்டுள்ள நிலையில், கட்சியின் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் என். ஆனந்த், அதிமுகவின் உயர்மட்டத் தலைமையைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் அனலைப் பறக்கவிட்டுள்ளது. இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பா அல்லது முறையான கூட்டணிக்கான தொடக்கமா என்பது குறித்துக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பலத்த விவாதம் எழுந்துள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தவெகவின் 108 இடங்களுடன் அதிமுகவின் 47 இடங்கள் இணையும் பட்சத்தில், அந்த அணியின் பலம் 155 ஆக உயரும். இது ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 என்ற எண்ணிக்கையை விட மிக அதிகமாகும். கடந்த சில தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தோல்விகளைச் சந்தித்த அதிமுக, தற்போது ஒரு புதிய மாற்றத்தை நோக்கிப் பயணிக்க விரும்புவதையே இந்த நகர்வு உணர்த்துகிறது.

திரைமறைவில் நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் இப்போது பொதுவெளிக்கு வந்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மக்கள் அளித்த தீர்ப்பின்படி ஒரு நிலையான அரசை வழங்குவதற்கு அதிமுகவும் தவெகவும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாயம் என்று அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஏற்கனவே கருத்துத் தெரிவித்து வந்தனர். இந்தச் சந்திப்பின் மூலம் தவெக-அதிமுக கூட்டணி உருவாவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்தக் கூட்டணி அமைந்தால், அது தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அதிகாரப் பகிர்விற்கு வழிவகுக்கும் என்பதுடன், திராவிட அரசியலின் அடுத்தகட்டப் பரிணாமமாகவும் பார்க்கப்படும். ஆளுநரின் அழைப்பிற்காகக் காத்திருக்கும் இந்த வேளையில், ஆனந்த் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் இந்தச் சந்திப்பு புதிய ஆட்சி அமைப்பதற்கான இறுதி கட்டத் தயாரிப்பாகவே பார்க்கப்படுகிறது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal