அதிமுகவில் உட்கட்சி மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பு, சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் சசிகலாவை சந்தித்ததாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஜெயலலிதா தலைமையில் வலுவான கட்டமைப்புடன் இருந்த அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு பிளவுகளை சந்தித்தது. சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றனர். சமீபகாலத்தில் மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் தவெக உள்ளிட்ட மாற்று அரசியல் பாதையை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் வேலுமணி - சண்முகம் தரப்பு தற்போது சசிகலாவை மீண்டும் அதிமுகவுக்குள் அழைக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருகாலத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்த வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரே சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். தற்போது அதே தரப்பு சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் அழைக்க முயற்சிப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
சசிகலா கட்சிக்குள் வந்தால் எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்தை உடைக்க முடியும் என்பதே வேலுமணி - சண்முகம் தரப்பின் கணக்கு என கூறப்படுகிறது. ஏற்கனவே சசிகலாவுடன் தொடர்பில் இருக்கும் நிர்வாகிகள் மட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பவர்களும் அவருக்கு ஆதரவாக திரும்ப வாய்ப்புள்ளதாக அந்த தரப்பு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, வேலுமணி தரப்பைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் சென்னையில் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில் சசிகலாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடைபெற்றதாகவும், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட சில தலைவர்களும் சசிகலாவுடன் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த அழைப்பை சசிகலா உடனடியாக ஏற்கவில்லை என கூறப்படுகிறது. "எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து என்னை ஒதுக்கிவிட்டு, நான் அழைத்தபோது வராமல் இருந்தவர்கள் இப்போது மட்டும் கட்சிக்குள் வருமாறு அழைப்பது ஏன்?" என அவர் கேள்வி எழுப்பியதாகவும், முதலில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க வேண்டும்; அதன் பிறகே தாம் வருவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், அதிமுக பிளவுக்கு எடப்பாடி பழனிசாமியும் ஒரு காரணம் என சசிகலா சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு வேலுமணி தரப்பு, "நீங்கள் வந்தால் அனைத்தும் சரியாகிவிடும்" என பதிலளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, வேலுமணி - சண்முகம் தரப்பு சசிகலாவை சந்திக்கப் போவதை அறிந்த எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், அதற்கு சில நாட்களுக்கு முன்பே சசிகலாவை சந்தித்து பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போது, வேலுமணி தரப்பின் பேச்சை நம்ப வேண்டாம் என்றும், கடந்த காலத்தில் நடந்தவற்றுக்கு தங்கள் தரப்பில் வருத்தம் இருப்பதாகவும், சசிகலா மீண்டும் அரசியலில் செயல்பட்டால் தாங்கள் ஆதரவாக இருப்போம் என்றும் மிதுன் கூறியதாக தகவல்கள் உலா வருகின்றன.
இதனால் கோபமடைந்த சசிகலா, கடந்த காலத்தில் தன்னை எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள் தற்போது தன்னிடம் வந்து பேசுவதை ஏற்க முடியாது என கடுமையாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இனி தன்னால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், சசிகலா தற்போது எந்த அணியுடனும் உடனடியாக இணையாமல், அனைவரின் நகர்வுகளையும் கவனித்து வருவதாகவே தெரிகிறது.
எனினும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிமுக தலைவர்களின் அரசியல் கணக்கில் சசிகலா மீண்டும் ஒரு முக்கியமான துருப்புச் சீட்டாக மாறியிருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வருவாரா? அல்லது பிளவுபட்ட அதிமுக அணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தனக்கென தனி பாதையை உருவாக்குவாரா? என்பதே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கியக் கேள்வியாகியுள்ளது.
Seithi Punal
