விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், இயக்குநர் ஹெச்.
வினோத் அளித்துள்ள சமீபத்திய பேட்டி புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், ஆரம்பத்தில் ஜனவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தணிக்கை சிக்கல்கள், நிர்வாக தாமதங்கள் மற்றும் பின்னர் படம் இணையத்தில் கசிந்ததாக வெளியான தகவல்கள் காரணமாக, அதன் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது.
'ஜனநாயகன்' திரைப்படம் அரசியல் பின்னணியைக் கொண்டதாக பேசப்பட்டதால், அதன் வெளியீட்டைச் சுற்றி பல்வேறு யூகங்கள் எழுந்தன. குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, படத்தின் மீதான கவனம் மேலும் அதிகரித்தது.
இதற்கிடையில் படம் மீண்டும் தணிக்கைக்காக சென்றதாகவும், சில நிர்வாக நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து தயாரிப்பு தரப்போ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹெச். வினோத்திடம் 'ஜனநாயகன்' வெளியீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,"ஜனநாயகன் விஷயம் எதுவும் என் கையில் இல்லை. எல்லா உண்மைகளையும் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. நான் சொன்னாலும் அதை வெளியிட உங்களுக்கு தைரியம் இருக்காது."
என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த பதில் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
விஜய் தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது ரசிகர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.
படம் வெளியீட்டைச் சுற்றியுள்ள மர்மம் தொடரும் நிலையில், இயக்குநர் ஹெச். வினோத்தின் இந்த கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.'ஜனநாயகன்' தொடர்பான அடுத்த கட்ட அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Seithi Punal
