"மனோபாலா அண்ணன் புதிதாக கார் வாங்கியிருப்பதாக கூறி, அதை என்னிடம் காட்டுவதற்காக அழைத்து வந்தார்.
இருவரும் அந்த காரில் ஒரு ரைடு சென்றோம். அப்போது, 'அண்ணன்.. கார் சூப்பராக இருக்கிறது' என்று சொன்னேன். அதை கேட்ட அவர், அடுத்த மூன்றாவது நாளே எனக்கும் அதேபோன்ற ஒரு புதிய காரை புக் செய்துவிட்டார்" என்று நடிகர் யோகி பாபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் வலம் வந்தவர் மனோபாலா. தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த அவர், திரைத்துறையில் பலருக்கும் உதவி செய்த மனிதராகவும் அறியப்பட்டார்.
இந்த நிலையில் மனோபாலாவுக்கும் தனக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவு குறித்து நடிகர் யோகி பாபு பகிர்ந்துள்ள சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
இதுகுறித்து பேசிய யோகி பாபு, "மனோபாலா அண்ணன் ஒருநாள் புதிதாக கார் வாங்கியிருப்பதாக சொல்லி அதை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். 'வா.. உன்னை வைத்து ஓட்டிக் காட்டுகிறேன்' என்று சொல்லி அழைத்துச் சென்றார். இருவரும் அந்த காரில் ஒரு ரைடு சென்றோம்.
அப்போது நான், 'அண்ணன்.. கார் சூப்பராக இருக்கிறது' என்று சாதாரணமாகத்தான் சொன்னேன். அதை மனதில் வைத்துக்கொண்ட அவர், அடுத்த மூன்றாவது நாளே எனக்கு போன் செய்தார்.
'உனக்கும் இதேபோன்ற ஒரு புதிய காரை புக் செய்துவிட்டேன். வா.. போய் வாங்கிக்கொள்ளலாம்' என்று சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு மனோபாலா அண்ணனுக்கு என்னை பிடிக்கும்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஒருவர் ஒரு பொருளை பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்காகவே, அதேபோன்ற பொருளை அவருக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மனம் எல்லோருக்கும் வந்துவிடாது. ஆனால் மனோபாலா அப்படிப்பட்ட மனிதராக இருந்தார் என்று யோகி பாபு கூறியுள்ளார்.
திரைத்துறையில் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே மனோபாலா தன்மீது மிகுந்த அன்பு காட்டியதாகவும், தனது வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்தவர்களில் அவரும் ஒருவர் என்றும் யோகி பாபு நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
"மனோபாலா மிகச்சிறந்த மனிதர். அவரை தமிழ் சினிமா இழந்துவிட்டது" என்று யோகி பாபு கூறியிருப்பது ரசிகர்களையும் திரையுலகினரையும் நெகிழ வைத்துள்ளது.
திரையில் தனது தனித்துவமான உடல்மொழியாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களை சிரிக்க வைத்த மனோபாலா, திரைக்குப் பின்னால் சக கலைஞர்களிடம் காட்டிய அன்பையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் மற்றொரு சம்பவமாக யோகி பாபு பகிர்ந்த இந்த நினைவு அமைந்துள்ளது.
Seithi Punal
