தூத்துக்குடி நகரை நோக்கி வெளிநகரங்களில் இருந்து கஞ்சா கடத்தல் நடைபெறுகிறது என்ற ரகசிய தகவல் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்களிடம் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்கினர்.
அதன் பேரில் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சிப்காட் பகுதியில் மறைமுகமாக கண்காணிப்பு வலையை விரித்தனர்.

அந்த நேரத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான ஒரு லாரியை நிறுத்தி ஆய்வு செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல மூட்டைகள் அவர்களின் கவனத்தை ஈர்த்தன. அவற்றை திறந்து சோதனை செய்ததில், அதற்குள் பெருமளவில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
உடனடியாக காவலர்கள் நடவடிக்கை எடுத்து, அந்த லாரியில் இருந்த 349 மூட்டைகளில் அடங்கிய சுமார் 718 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த போதைப் பொருட்களின் சர்வதேச மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநரான தூத்துக்குடி அய்யப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் எனும் குண்டுமணி (33), சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த குகன்குமார் (31), புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (33), பழையகாயலைச் சேர்ந்த சிவபெருமாள் (30) ஆகிய நால்வரையும் காவலர்கள் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மேலதிக விசாரணைக்காக உட்படுத்தப்பட்டனர்.இதேவேளை, லாரியில் இருந்த அய்யாதுரை, லட்சுமணன், சங்கர்கணேஷ், செல்வம் எனும் முத்துசெல்வம் ஆகியோர் தப்பிச்சென்ற நிலையில், அவர்களை பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Seithi Punal
