தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகிலுள்ள வரதராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மாசானமுத்துவின் மகன் மாரிச்செல்வம் (19), தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
விடுமுறை நாட்களில் தந்தைக்கு துணையாக ஆடுகளை மேய்க்கச் செல்வது அவரது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி விடுமுறை என்பதால், மாரிச்செல்வம் ஆடுகளை உமரிக்கோட்டை பகுதியில் உள்ள குளத்திற்குக் கொண்டு சென்றார். அப்போது, ஆடுகளை குளிப்பாட்ட முயன்றபோது அவை திடீரென ஆழமான நீர்ப்பகுதியை நோக்கி நகர்ந்தன. அவற்றை கட்டுப்படுத்த முயன்ற மாரிச்செல்வம், நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் சிக்கி மூழ்கினார்.
அவரது உதவி கோரும் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தட்டப்பாறை காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் நீண்ட தேடுதலுக்குப் பிறகு மாரிச்செல்வத்தை மீட்டனர்.
உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாளில் தந்தைக்கு உதவியாக சென்ற இளைஞன் உயிரிழந்த இந்த துயர சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Seithi Punal
