மதுரையில் திருமங்கலம் அருகேயுள்ள எஸ். கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வத் - சவுமினி தம்பதியினர், வேலை நிமித்தமாக ஐதராபாத் அருகிலுள்ள சபில்கூடா பகுதியில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு விரான்ஞ் என்ற 7 மாத ஆண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில், குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்த அஸ்வத், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலில் குழந்தைக்கு முதல் முடிக்காணிக்கை செலுத்தும் நிகழ்வை நடத்தினர். வழிபாட்டு நிகழ்வுகளை நிறைவு செய்த பின்னர், குடும்பத்தினர் காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது காரை அஸ்வத் இயக்கி வந்தார்.திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக பாய்ந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பலத்த சத்தத்துடன் மோதி நொறுங்கியது.
இந்த கோர விபத்தில், 7 மாத குழந்தையான விரான்ஞ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குலதெய்வ வழிபாட்டை முடித்து மகிழ்ச்சியுடன் திரும்பிய குடும்பத்திற்கு இந்த துயர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், காரில் பயணித்த சவுமினி மற்றும் உறவினரான மலர்கொடி (65) ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சோக விபத்து அப்பகுதியில் பெரும் கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Seithi Punal
