மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி அரசியல் சூழல் கடும் போட்டியுடன் நகர்கிறது.
அந்த நேர கணக்கெடுப்பின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி 144 தொகுதிகளில் முன்னிலை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் 3 இடங்களிலும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 4 தொகுதிகளிலும் முன்னிலைப் பெற்றுள்ளனர்.மேலும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பல தொகுதிகளில் வலுவான முன்னிலைப் பிடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாகப் போராடி வருகிறது.மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெற்றது.
எனினும், இரண்டாம் கட்டத்தில் இடம்பெற்ற ஃபால்டா தொகுதியில் சில சீர்கேடுகள் ஏற்பட்டதனால், அங்கு வரும் 21ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தற்போது 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மட்டும் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்து வரும் மம்தா பானர்ஜிக்கு, இம்முறை பாரதிய ஜனதா கட்சி கடும் சவாலை முன்வைத்து வருகிறது.
மொத்தம் 294 தொகுதிகளில் குறைந்தபட்சம் 148 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியை அமைக்கும் என்பதால், இறுதி முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seithi Punal
