Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாளை முதல் பால் வாங்க கூடுதல் காசு...! லிட்டருக்கு ரூ.4 உயர்த்தும் தனியார் நிறுவனங்கள்...! - அதிர்ச்சியில் உறைந்த குடும்பங்கள்...!

நாளை முதல் பால் வாங்க கூடுதல் காசு...! லிட்டருக்கு ரூ.4 உயர்த்தும் தனியார் நிறுவனங்கள்...! - அதிர்ச்சியில் உறைந்த குடும்பங்கள்...!

மிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் மீண்டும் விலை உயர்வை அமல்படுத்த முடிவு செய்துள்ளன. நாளை (09.07.2026) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுவதால், குடும்பங்களின் மாதாந்திர செலவினம் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, அன்றாட தேவைக்காக பாலை நம்பியிருக்கும் இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நாடு முழுவதும் கடந்த ஓராண்டாக பால் உற்பத்தி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் பால் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகளவில் பாலைப் பெற தனியார் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு, கொள்முதல் விலையை தொடர்ந்து உயர்த்தி வழங்கி வருகின்றன.

இதனால் அதிகரித்த செலவினங்களை சமாளிக்கும் நோக்கில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பால் மற்றும் தயிரின் விற்பனை விலையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் நிலவிய போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், வாகன எரிபொருள் செலவு, போக்குவரத்து கட்டணம், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால், விலை உயர்வு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளதாக தனியார் பால் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, நாட்டின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா நிறுவனம், நாளை முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.29-இல் இருந்து ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-இல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.39-இல் இருந்து ரூ.41 ஆகவும் உயர்கிறது.

அதேபோல், ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.54-இல் இருந்து ரூ.57 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.66-இல் இருந்து ரூ.69 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.73-இல் இருந்து ரூ.76 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 500 கிராம் ஹட்சன் தயிர் ரூ.42-இல் இருந்து ரூ.44 ஆகவும், ஆரோக்யா தயிர் ரூ.40-இல் இருந்து ரூ.42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆரோக்யா நிறுவனத்தைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வரும் பிற தனியார் பால் நிறுவனங்களும் விரைவில் இதேபோன்ற விலை உயர்வை அறிவிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடைக்கால மழை பொய்த்துப் போனதும், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பால் உற்பத்தி வீழ்ச்சியும் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலையும், கூடுதல் ஊக்கத் தொகையும் வழங்குவதால், ஆவினுக்கு பால் வழங்கி வந்த பல உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களை நாடத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஆவினின் தினசரி பால் கொள்முதல் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 25 லட்சம் லிட்டர் அளவிலேயே நிலைத்திருப்பதாகவும், அது உயராத நிலை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மழைப்பொழிவு குறையும் அபாயம் நிலவுவதால், வரும் மாதங்களில் தமிழகம் வரலாறு காணாத பால் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் சூழல் உருவாகக்கூடும் என்றும், பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் பால் உற்பத்தியை அதிகரிக்க முக்கிய பங்காற்றியதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், அந்தத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், கால்நடை தீவனம், மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை விலை, முகவர்களுக்கான விற்பனை கமிஷன் உள்ளிட்டவற்றையும் மறுஆய்வு செய்து உயர்த்துவதோடு, பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துமாறு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal