தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் இன்னும் பரபரப்பாக இருக்கும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, தேர்தல் வெற்றிக்குப் பிறகு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அந்த சந்திப்பின்போது நடந்த உரையாடலை பின்னர் செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், "என் வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்டாலின். அவரை சந்தித்து நன்றி தெரிவித்தேன். அப்போது நீங்கள் மீண்டும் சட்டப்பேரவைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்காக நான் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியிலேயே ராஜினாமா செய்யத் தயார் என சொன்னேன். ஆனால் அவர் உடனே 'அப்படியெல்லாம் பேசக்கூடாது' என்று கூறிவிட்டார்" என்றார்.
இந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், திமுக பல முக்கிய கோட்டைகளை இழந்துள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரில் பெரும்பாலான தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. அதிலும், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்தது முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றது திமுக கூட்டணிக்கு ஒரு முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது. மும்முனைப் போட்டி நிலவிய அந்தத் தொகுதியில் அவர் 69,739 வாக்குகள் பெற்று 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தனது வெற்றிக்கான காரணங்களை விளக்கிய தமிமுன் அன்சாரி, தொகுதியில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரங்கள், நேரடி மக்கள்சந்திப்புகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் உருவாக்கப்பட்ட நம்பிக்கை வட்டம் ஆகியவை முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார். "25 ஆண்டுகளாக எட்ட முடியாத வெற்றியை 25 நாட்களில் சாத்தியப்படுத்தியுள்ளோம்" எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளுக்காக சமரசமின்றி செயல்படுவோம் என்றும், குடிநீர், சாலை மற்றும் பட்டா பிரச்சினைகளை முன்னுரிமையாக எடுத்துக்கொள்வோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஸ்டாலினை மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டு வர வேண்டும் என்ற அவரது கருத்து அரசியல் வட்டாரங்களில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இது திமுக கூட்டணிக்குள் ஸ்டாலின் மீதான ஆதரவு மற்றும் மரியாதையை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Seithi Punal
