தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வெளியாகி வருகிறது. தற்போதைய உத்தியோகபூர்வ தகவலின் படி, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
பெரும் எதிர்பார்க்கப்பட்ட சென்னையில் 16 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் 109 அதிமுக 75, திமுக 53 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காலை 11 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் முன்னிலையில் உள்ளனர்.
குறிப்பாக சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், அமைச்சர்கள் சேகர்பாபுவின் துறைமுகம், மா.சுப்பிரமணியன் போட்டியிடும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். கொளத்தூர் மூன்றாவது சுற்று முடிவில், அந்த தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் 10639 வாக்குகளும், த.வெ.க 12916 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதன்படி 2,277 வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க முன்னிலை வகிக்கிறது.
அதேநேரம், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளார். அங்கு தவெக ஆதரவு வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். வில்லிவாக்கத்தில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் உள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னடைவில் உள்ளார். எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் ராஜ்மோகனும், திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜும் முன்னிலையில் உள்ளனர்.
30 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இருந்த பாளையங்கோட்டை தொகுதியில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் தவெகவின் பிரபு முதலிடத்தில் உள்ளார். சீமான் இங்கு 03வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி சேப்பாக்கம் பகுதியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.
Seithi Punal
