''பெரியார், அண்ணா, கலைஞரை விட்டுவிட்டு திருமாவளவனை அரசியல் ஆசான் என உதயநிதி கூறுவதை ஏற்க முடியாது.
சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக உள்ளது. தவெக அரசு ஒரு மதத்திற்கான, ஒரு சாதிக்கான ஆட்சியாகவே உள்ளது. அனைவருக்குமான, அனைத்து மதத்திற்குமான ஆட்சியாக மாற வேண்டும்.'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, தேனி மாவட்டத்தில் மேகமலை பகுதிகளில் வசிக்கும் மக்களை, வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து இப்பகுதி மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன..? என்பது குறித்து யாரும் பேசுவதில்லை என்றும், இந்த தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், மாஞ்சோலை, மேகமலை பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழும் மக்களை வெளியேற்றுவதை கண்டித்து மதுரையில் வரும் செப்டம்பர் 12-இல் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், மாஞ்சோலையில் தேயிலை தோட்டங்களை 99 வருட குத்தகைக்கு எடுத்திருந்த நிறுவனம் அரசுக்கு ரூ.4,655 கோடி குத்தகை பாக்கி வைத்துள்ளதாகவும், இப்பணத்தை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேகமலை மற்றும் மாஞ்சோலை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண 2006-ஆம் ஆண்டின் வன உரிமை சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அத்துடன், தவெக பெரும்பான்மை இல்லாததால் கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்டு ,விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்த்து ஆட்சி நடத்தி வருகிறது. தற்போது பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தவெக கூட்டணி கட்சிகளிடம் முரண்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாகவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையை தவெக. அரசு சமூக நலத்துறை என மாற்றியதை வரவேற்கிறதாகவும், ஆனால், சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு, ஆதிதிராவிடர் நலத்துறை என பேசியுள்ளார். அவர் குறிப்பிட்ட சாதியை மட்டும் முன்னிலைப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், வரும் செப்டம்பர் 11-இல் தவெக அரசு மற்றும் அமைச்சர் வன்னி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் போராட்டம் நடத்தும் என்றும், இனிமேல் ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நலத்துறை என்றே அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதேப்போன்று, தவெக அரசு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த திட்டத்துக்காக குறிப்பிட்ட கார்பரேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகமெங்கும் பல்லாயிரணக்கணக்காக தங்க நகை தொழிலாளர்கள் வேலையில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு, தங்க மோதிரம் வழங்கும் திட்ட பணிகளை பிரித்து வழங்க வேண்டும். இதுபோல், பொங்கல் பண்டிகை இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அவர்களிடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தை காப்பாற்றுவதற்கு ஒரு திட்டம் கூட உருப்படியாக தவெக உருவாக்கவில்லை என்றும், முன்யோசனை இல்லாமல், தவெக அரசு திட்டங்களை அறிவிக்கிறதாகவும், சமூக வலைதளங்கள் மூலம் ஒரு மாயை உருவாக்கி, விஜய்யை முதல்வராக மக்கள் அமர வைத்து விட்டார்கள். இதில் மக்கள் ஏமாந்தார்களா, ஏமாற்றப்பட்டார்களா என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று கூறுவது ஏற்புடையதல்ல. அகல கால் வைத்தால் அது விஜய்க்கு தான் பாதிப்பாக அமையும் என்றும், சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தடுமாறுகிறார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் திராவிட மாடலின் கொள்கை தலைவர்களாக இருக்கும்போது, என்னுடைய அரசியல் ஆசான் விசிக தலைவர் திருமாவளவன் என உதயநிதி கூறுவது ஏற்புடையதா? என்று க்ளெவி எழுப்பியுள்ளார்.
அத்துடன், சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக உள்ளதாகவும், தவெக அரசு ஒரு மதத்திற்கான, ஒரு சாதிக்கான ஆட்சியாகவே உள்ளது. அனைவருக்குமான, அனைத்து மதத்திற்குமான ஆட்சியாக மாற வேண்டும் என்று செய்தியாளர்களிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
Seithi Punal
