Dailyhunt
தவெக ஆட்சி அமைக்கும் கணக்கு! அதிமுக எம்.எல்.ஏக்களை இழுக்கும் ஆபரேசனை ஆரம்பித்த செங்கோட்டையன்! ராஜ்யசபா போஸ்ட்?

தவெக ஆட்சி அமைக்கும் கணக்கு! அதிமுக எம்.எல்.ஏக்களை இழுக்கும் ஆபரேசனை ஆரம்பித்த செங்கோட்டையன்! ராஜ்யசபா போஸ்ட்?

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும் அரசியல் விமர்சகர்களும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆனால், ஆட்சியை அமைக்க தேவையான 118 என்ற பெரும்பான்மை இலக்கை எட்ட இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்த சூழலில், காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களுடன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தவெகின் பலம் 113 ஆக உயர்ந்தாலும், இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது. இதனால் அரசியல் களம் முழுவதும் கூட்டணி கணக்குகள் மற்றும் ஆதரவு அரசியலால் பரபரப்பாகியுள்ளது.

இதற்கிடையே, அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்து வெற்றி பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முக்கிய அரசியல் நகர்வுகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொங்கு மண்டலம், வடதமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் தன்னுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏக்களுடன் அவர் தொடர்ந்து பேசி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

குறிப்பாக தேர்தலில் தோல்வியடைந்த சில முக்கிய முன்னாள் அமைச்சர்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி, இடைத்தேர்தல் வாய்ப்பு போன்ற அரசியல் உறுதிமொழிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தற்போதைய எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தால், அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

அதிமுகவுக்குள் கூட விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்ற கருத்து உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில முன்னணி தலைவர்கள் திமுக ஆட்சியைத் தடுக்க தவெக அரசை ஆதரிப்பது அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கருதுவதாக கூறப்படுகிறது. இது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையன் முன்னெடுத்து வருவதாகக் கூறப்படும் இந்த அரசியல் முயற்சிகள் வெற்றி பெற்றால், தவெக பெரும்பான்மையை எளிதாக எட்டும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுவரை இந்த தகவல்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை.

இதனால், தமிழக அரசியலில் அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானவை. தவெக பெரும்பான்மையை நிரூபிக்கிறதா, அல்லது எதிரணிகள் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குகிறதா என்பதே மாநிலத்தின் அடுத்த கட்ட அரசியல் திசையை தீர்மானிக்கப்போகிறது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal