தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவூர்சத்திரம் அருகிலுள்ள கீழப்பாவூர் மேட்டு தெருவைச் சேர்ந்த மாரிக்கண்ணன் (47), அ.தி.மு.க.வின் உறுதியான தொண்டராகவும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகவும் அறியப்பட்டவர்.
அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த அவர், குடும்பத்தில் மனைவி வேலம்மாள், இரு மகன்கள், இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.

நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பாலான தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை பெற்று வெற்றியைப் பதிவு செய்த நிலையில், அ.தி.மு.க. குறைந்த எண்ணிக்கையிலேயே இடங்களைப் பெற்றது. ஆலங்குளம் தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியை சந்தித்தது.
இதனை தொலைக்காட்சியில் கவனித்த மாரிக்கண்ணன், எதிர்பார்த்த வெற்றி அமையாததால் மனவேதனையில் ஆழ்ந்ததாக கூறப்படுகிறது. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இதை பகிர்ந்து கொண்ட அவர், கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மாலை நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், மாரிக்கண்ணன் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய அவரது பிள்ளைகள், தந்தை உயிரிழந்த நிலையில் தொங்கியதை கண்டு பரிதாபமாகக் கதறினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவலர்கள் விரைந்து சென்று மாரிக்கண்ணனின் உடலை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எதிர்பார்த்த முடிவை பெறாததைத் தொடர்ந்து, பாவூர்சத்திரம் பகுதியில் நடந்த இந்த துயர சம்பவம், அங்குள்ள மக்களிடையே ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Seithi Punal
