2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சியை மறுசீரமைக்கும் பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக இளம் தலைமுறையினரை மீண்டும் கட்சியுடன் இணைக்கும் நோக்கில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'GenZ DMK Meetup' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். திமுகவின் பல்வேறு தலைவர்களும் கலந்துகொண்டு கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து உரையாற்றினர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எடுத்த அணுகுமுறையைப் பாராட்டினார்.
அவர் கூறியதாவது:"தேர்தலில் பின்னடைவு ஏற்பட்ட பிறகு, 'மக்கள் ஏன் இப்படி செய்தார்கள்' என்று மக்கள் மீது கோபப்படாமல், இன்னும் அவர்களிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன என்று நினைத்து, அடுத்த நாளே கொளத்தூர் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தவர் தலைவர் ஸ்டாலின்.இவ்வளவு பெரிய தேர்தல் பின்னடைவுக்குப் பிறகும், மக்கள் தீர்ப்பை மதித்து அவர்களை நேரில் சந்தித்த தலைவரை இந்த நாடு எப்போதாவது பார்த்திருக்கிறதா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.அதற்கு காரணம் அவரது கொள்கைப் பிடிப்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும் தான்."
மேலும் அவர் திமுகவின் பங்கு குறித்து பேசும்போது,"பற்று, பாசம் எல்லாவற்றையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுககாரனை விட்டால் வேறு யாராலும் முடியாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.நான் எப்போதும் சொல்வது போல, திமுககாரனுக்கு ஒரு திமிர் இருக்கும். அந்த திமிர் தனிப்பட்ட அகந்தை அல்ல; தமிழ்நாட்டை முன்னேற்றும் திறன் நமக்கே இருக்கிறது என்ற நம்பிக்கையின் திமிர்.தமிழகத்திற்கு வளர்ச்சியை கொடுத்ததற்கான பல சான்றுகளை நாங்கள் காட்ட முடியும்" என்றார்.
டிஆர்பி ராஜாவின் இந்தப் பேச்சு திமுக ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களிலும் கவனம் ஈர்த்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் திமுக தனது அமைப்பையும் இளைஞர் அணுகுமுறையையும் புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

