நடிகை ஊர்வசி, மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து குறித்து பகிர்ந்துள்ள ஒரு சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், உருவகேலி குறித்து தனது பார்வையை மாற்றிய ஒரு அனுபவத்தை பகிர்ந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஊர்வசி, தற்போது குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள 'பரிமளா & கோ' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பழைய சினிமா சூழலில் உருவகேலி எவ்வளவு சாதாரணமாக பார்க்கப்பட்டது என்பதை நினைவுகூர்ந்தார்."முன்பெல்லாம் ஒருவரின் தோற்றம், உடல் அமைப்பு அல்லது உடல் குறைபாடுகளை வைத்து கேலி செய்வது தவறு என்ற உணர்வே பலருக்கும் இருக்கவில்லை. நானும் அதில் விதிவிலக்கல்ல,"என்று அவர் கூறினார்.
ஒரு திரைப்படத்தில் குமரிமுத்துவுடன் நடித்தபோது, அவரைப் போலவே கண்களை வைத்து நடிக்கும்படி இயக்குநர் கூறியதாக ஊர்வசி தெரிவித்தார்."நானும் அப்படியே நடித்தேன். ஷாட் முடிந்ததும் அனைவரும் சிரித்தார்கள். அப்போது அது தவறு என்று எனக்கு தோன்றவில்லை,"என்றார்.
பின்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக குமரிமுத்துவை பேட்டி எடுத்தபோது, அவரது வாழ்க்கைப் போராட்டங்களை கேட்டு மனம் உடைந்ததாக கூறினார்.
அந்த பேட்டியில் குமரிமுத்து தனது சிறுவயது கனவுகளைப் பகிர்ந்ததாக ஊர்வசி கூறினார்."நான் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்தேன். போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் இந்தக் கண்களால் அந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை,"என்று குமரிமுத்து கூறியதாக அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும்,"டிரைவிங் கற்றுக்கொள்ளச் சென்றபோதும், 'சாதாரண கண்களே சரியாக ஓட்ட முடியவில்லை, நீ எப்படி?' என்று கேலி செய்தார்கள்,"என்றும் அவர் கூறியிருந்தாராம்.
பேட்டியின் போது குமரிமுத்து தன்னிடம் கூறிய ஒரு வார்த்தை தான் மனதை மிகவும் பாதித்ததாக ஊர்வசி தெரிவித்தார்."நீ கூட ஒரு படத்தில் என்னை மாதிரி கண் வைத்து நடித்தாயே..."
என்று குமரிமுத்து கூறியதை கேட்டவுடன், தன்னால் பேச முடியாமல் போய்விட்டதாக அவர் கூறினார்."அந்த பேட்டி முடிந்ததும் வெளியே சென்று அழுதேன். அப்போது தான் யாருடைய உடல் அமைப்பு, தோற்றம் அல்லது குறைபாட்டையும் கேலி செய்வது எவ்வளவு வேதனையானது என்பதை உணர்ந்தேன்,"என்று ஊர்வசி தெரிவித்தார்.
குமரிமுத்து அப்போது,"இந்தக் கண்கள்தான் இப்போது எனக்கு சோறு போடுகிறது,"என்று கூறியதாகவும், அந்த வார்த்தைகள் தன்னை ஆழமாக பாதித்ததாகவும் ஊர்வசி கூறினார்.
அதன் பிறகு,"யாரையும் உருவகேலி செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். இன்று வரை அந்த முடிவை கடைபிடித்து வருகிறேன்,"என்று அவர் தெரிவித்தார்.
ஊர்வசியின் இந்த பகிர்வு சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குமரிமுத்துவின் வாழ்க்கைப் போராட்டத்தையும், மனிதர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியத்தையும் இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Seithi Punal
