தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும் தங்களது பாடல் வரிகளால் தனி முத்திரை பதித்தவர்கள்.
இருவரும் போட்டி போட்டு பாடல்கள் எழுதிய காலகட்டத்திலும், ஒருவர் மற்றொருவரின் திறமையை மனதார பாராட்டிய சம்பவங்கள் பல உள்ளன. அந்த வகையில், வாலியின் ஒரு பாடலைக் கேட்டு கண்ணதாசன் வியந்து பாராட்டியதுடன், அவருக்கு விஸ்கி பாட்டிலையும் பரிசாக அனுப்பிய சம்பவம் சுவாரஸ்யமானதாக பார்க்கப்படுகிறது.
1968-ம் ஆண்டு வெளியான 'கண்மலர்' திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, சௌகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை கண்ணதாசனும் வாலியும் எழுதியிருந்தனர்.
இதில் வாலி எழுதிய 'ஓதுவார் உன் பெயர் ஓதுவார்' என்ற பாடல் கண்ணதாசனை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது.
ஒருமுறை அந்தப் பாடலை கேட்ட கண்ணதாசன், "இவ்வளவு சிறப்பாக நான் எப்போது எழுதினேன்?" என்று தனது உதவியாளரிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு அந்தப் பாடலை எழுதியது வாலி என்று உதவியாளர் தெரிவித்ததும் கண்ணதாசன் ஆச்சரியமடைந்தாராம்.
மேலும், அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த சில வரிகள் தேவாரப் பாடல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை என்று முதலில் கண்ணதாசன் நினைத்ததாகவும், பின்னர் அவை வாலியின் சொந்த கற்பனை என்பதை அறிந்து அவரது திறமையை வியந்து பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வாலியை தொலைபேசியில் தொடர்புகொண்ட கண்ணதாசன், அவரது பாடல் வரிகளை மனதார பாராட்டியிருக்கிறார். அதோடு நிற்காமல், வாலிக்கு ஒரு பரிசையும் அனுப்பியுள்ளார்.
வாலிக்கு விஸ்கி பிடிக்கும் என்பதை அறிந்திருந்த கண்ணதாசன், தனது கார் ஓட்டுநர் மூலம் அவர் விரும்பிய விஸ்கி பாட்டிலை வாலிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஒரு கவிஞரின் திறமையை மற்றொரு கவிஞர் பொறாமையின்றி கொண்டாடிய இந்த சம்பவம், கண்ணதாசன் - வாலி இடையேயான நட்பின் அழகான நினைவுகளில் ஒன்றாக இன்றளவும் பேசப்படுகிறது. போட்டி நிறைந்த திரையுலகில் சக கலைஞரின் திறமையை மனதார பாராட்டிய கண்ணதாசனின் பெருந்தன்மைக்கும் இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
Seithi Punal
