Tuesday, 25 Dec, 11.20 am செய்தி புனல்

செய்திகள்
வரலாற்றை படிக்கும்போதே, உடம்பில் வீரம் ஏறும் வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினம் இன்று!.

ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று(25122018). இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் ராணியாக இருந்தார். இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

இந்திய சுதந்திர வரலாற்றில் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று
ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை ஆகும். நாம் வீரமங்கை பற்றி அறிந்திருப்பது ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு நம் தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாரின் வரலாறாகும்.

1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செம்மநாட்டு மறவர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்று பல மொழிகளை கற்றார்.

1746ல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார்.1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.

அவர்களை வீழ்த்த தனது அமைச்சர் தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு வியப்படைந்த ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார்.

திறமையான படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.

இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.

உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக இருந்தது. கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை அடித்து நொறுக்கி வென்று சிவகங்கையை அடைந்தனர்.

வீரமங்கை வேலுநாச்சியார் தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். வீரமங்கை தன்னுடைய ஐம்பதாவது வயதில், சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக ஆட்சி புரிந்தார் வேலு நாச்சியார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.

இதற்காகவே பென்குழந்தைகள் வீரமாக வளரவேண்டும் என்பதற்காக, தென் மாவட்டங்களில் பிறக்கும் அதிகப்படியான பெண் குழந்தைகளுக்கு வேலு நாச்சியார் என்றே பெயர் சூட்டுகின்றனர். எக்காலத்திலும் அழியாத வரலாறாய் வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாறு இருக்கும் என்பது உண்மை.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithipunal
Top