Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வார்த்தைகளால் அடித்த சாட்டையடி...! 'கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல்'... பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழித்த மாணிக்கம் தாகூர்...!

வார்த்தைகளால் அடித்த சாட்டையடி...! 'கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல்'... பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழித்த மாணிக்கம் தாகூர்...!

மேகதாது அணை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.

குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டால், ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்க மாட்டோம். அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று நான் தெரிவித்த கருத்தை, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கேலி, கிண்டலுடன் விமர்சித்திருப்பது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநில அரசியலில் பா.ஜ.க.வின் செல்வாக்கு பெருமளவில் குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் ஆதரவை இழந்த நிலையில் இருக்கும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸின் நிலைப்பாட்டை விமர்சிப்பது அரசியல் நகைச்சுவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும், காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலனுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்-மந்திரிகளான எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்றும் வெளிப்படையாக தெரிவித்ததையும், தமிழ்நாடு எல்லை வரை வந்து போராட்டம் நடத்தியதையும் மக்கள் மறந்துவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நதிநீர் பிரச்சினைகள் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையிலான விவகாரங்களில் சமரசத் தீர்வை ஏற்படுத்துவது மத்திய அரசின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பு என்றும், ஆனால் அந்தப் பொறுப்பை நிறைவேற்றாமல், தமிழ்நாட்டின் நலனை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

"தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையையும் கட்டக்கூடாது" என்று காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பளித்துள்ள நிலையிலும், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியிருப்பது மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் இரு மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் அரசியல் முயற்சியாகவே பார்க்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் மத்திய ஆட்சியில் இல்லை என்பதால், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை என்றும், அந்த அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுதியான நிலைப்பாடு என்றும், அதனை தடுக்க எந்த அளவிலான ஜனநாயகப் போராட்டத்திற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், கர்நாடக பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்து மேகதாது அணையை கைவிடுவதாக உறுதியைப் பெற்றுத் தர முடியுமா என்று நயினார் நாகேந்திரனுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு வழக்கறிஞர் நியமன விவகாரத்தில் த.வெ.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பா.ஜ.க. மீது குற்றம்சாட்டியுள்ள மாணிக்கம் தாகூர், ஊழல் குறித்து விமர்சனம் செய்வதற்கு முன்பு பா.ஜ.க. தலைவர்கள் தங்களது செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் மத்தியில் மேலும் விமர்சனத்திற்கும் அவப்பெயருக்கும் ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal