Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் பெயரில் போலி அறக்கட்டளை! விஜய் பெயரை வைத்தே விபூதி!வட மாநிலத்தில் நடந்த மோசடி!சைபர் கிரைம் போலீஸ் சொல்வது என்ன?

விஜய் பெயரில் போலி அறக்கட்டளை! விஜய் பெயரை வைத்தே விபூதி!வட மாநிலத்தில் நடந்த மோசடி!சைபர் கிரைம் போலீஸ் சொல்வது என்ன?

மிழக முதல்வர் விஜய் பெயரில் அறக்கட்டளை செயல்படுவதாகக் கூறி மத்தியப் பிரதேசத்தில் பொதுமக்களிடம் சைபர் கிரைம் கும்பல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழைகளுக்கு உதவுவது, கல்விக் கடன் மற்றும் தொழிற்கடன் பெற்றுத் தருவது உள்ளிட்ட பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி இதுவரை சுமார் ரூ.10 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் இந்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் விஜய்யின் பெயரில் அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருவதாக பொதுமக்களிடம் கூறிய சைபர் கிரைம் கும்பல், அதன் மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுவதாகவும், கல்விக் கடன், தொழிற்கடன் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் பெற்றுத் தரப்படுவதாகவும் கூறி பணம் வசூலித்ததாக தெரிகிறது.

குறிப்பாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும், அதற்காக ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை முதலில் செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதனை நம்பியவர்களிடம் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் இதுபோன்ற புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுவரை கிடைத்த புகார்களின் அடிப்படையில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தூர் சைபர் கிரைம் குற்றத்தடுப்பு காவல் அதிகாரி ராஜேஷ் தனுசியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுவதாகவும் கூறி பொதுமக்களை அணுகி மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு கட்டணங்களின் பெயரில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையுடனும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பகிர்ந்து வருவதாக இந்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்யின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் மற்றும் போலி அறக்கட்டளை தொடர்பான தகவல்களை தமிழக போலீசாரிடம் பகிர்ந்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் சைபர் குற்றங்கள் பல்வேறு புதிய வடிவங்களில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் போலி வீடியோக்களை உருவாக்குவது, தெரிந்தவர்களின் குரலை குளோனிங் செய்து அவர்களைப் போலவே பேசி பணம் கேட்பது, போலி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகள் மூலம் மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த சூழலில், பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி வழங்கப்படும் கடன், நிதியுதவி, மானியம் அல்லது உதவித்தொகை போன்ற சலுகைகளை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். குறிப்பாக முன்கூட்டியே கட்டணம் செலுத்தினால் அதிக அளவில் கடன் அல்லது நிதியுதவி கிடைக்கும் என்று கூறுபவர்களிடம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜய்யை மையப்படுத்திய அரசியல் மற்றும் சமூக வலைதள உள்ளடக்கங்கள், குறிப்பாக வட மாநிலங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருவதை சைபர் கிரைம் கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். விஜய்யின் பெயரில் வெளியாகும் உண்மையான தகவல்களுடன் போலி தகவல்களையும் கலந்து சமூக வலைதளங்களில் பரப்பி, அதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற முயற்சித்திருக்கலாம் என விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தூரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான சைபர் குற்றப் புகார்கள் பதிவாகி வரும் நிலையில், இதுபோன்ற மோசடி கும்பல்களின் வலையில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனவே, விஜய் பெயரில் அறக்கட்டளை, கடன், நிதியுதவி அல்லது அரசு சார்ந்த சலுகைகள் கிடைக்கும் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக யாராவது தொடர்பு கொண்டால், எந்தவொரு பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளாமல் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்பதே போலீசாரின் முக்கிய அறிவுறுத்தலாக உள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal