Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய்யை பிரதமர் வேட்பாளராக்கும் தவெக திட்டம்.. ராகுல் காந்தியின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய விஜய்? தமிழக கூட்டணியில் புதிய பூகம்பம்!

விஜய்யை பிரதமர் வேட்பாளராக்கும் தவெக திட்டம்.. ராகுல் காந்தியின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய விஜய்? தமிழக கூட்டணியில் புதிய பூகம்பம்!

2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தவெக தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் விவகாரம், தமிழக ஆளும் கூட்டணிக்குள் புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, தேசிய அரசியலிலும் தவெகவை விரிவுபடுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் பெயரை 'தேசிய வெற்றி கழகம்' என மாற்றுவது, சுமார் 100 மக்களவைத் தொகுதிகளை இலக்காகக் கொண்டு தேசிய அளவில் களமிறங்குவது உள்ளிட்ட வியூகங்கள் குறித்து தவெக தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் கட்சிக்கு புதிய கிளைகளை உருவாக்கும் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனுடன், சமூக வலைதளங்களில் '#VijayThalapathy' என்ற பெயரில் இந்தி மொழியில் வெளியாகி வரும் பிரசார வீடியோக்களும் காங்கிரஸ் மேலிடத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிகிறது. மேலும், சமீபத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதாக வெளியான தகவல்களும், அவரது தேசிய அரசியல் திட்டம் குறித்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளன.

இந்த சூழலில், தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2029 தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு பதிலாக, விஜய்யை மாற்றுத் தலைவராக தவெக முன்னிறுத்தும் பட்சத்தில், தமிழக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து டெல்லி மேலிடம் மறுபரிசீலனை செய்யலாம் என்ற பேச்சு எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியின் தரப்பிலிருந்து முக்கியமான தகவல்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் விஜய்யை நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சந்திப்பு, இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சந்திப்பின்போது, தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் அளித்த ஆதரவு, அதன் காரணமாக திமுகவுடன் ஏற்பட்டுள்ள அரசியல் விரிசல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் தரப்பினர் விஜய்யிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணிக்குள் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் அவர்கள் விளக்கியதாக தெரிகிறது. திமுகவுடனான உறவு பாதிக்கப்பட்டிருப்பது, திமுகவை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக எழும் தகவல்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, இத்தகைய சூழலில் ராகுல் காந்தியை ஓரங்கட்டி விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பிரசாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வட மாநிலங்களில் இந்தி மொழியில் விஜய்யை முன்னிறுத்தி நடைபெறும் சமூக வலைதள பிரசாரங்கள் குறித்து காங்கிரஸ் தரப்பு கவலை தெரிவித்ததாகவும், இதுபோன்ற பிரசாரங்களை தவெக நிர்வாகிகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் விஜய்யின் அணுகுமுறை காங்கிரஸ் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்த கருத்துகளை விஜய் அமைதியாக கேட்டுக்கொண்டதாகவும், அதே நேரத்தில் அதுகுறித்து விரிவான பதில் எதையும் அளிக்காமல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திப்பின் முடிவில் வழக்கமான நலம் விசாரிப்புகளுடன் உரையாடலை முடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவது, தமிழக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கடுமையான கருத்துகளை சில காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக முன்வைத்திருந்தாலும், தவெக தலைமை அதற்கு பெரிதாக பதிலளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்குப் பின்னால் தவெக கணக்கிட்ட அரசியல் அணுகுமுறை இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகளின் அரசியல் பலத்தையும் எதிர்கொண்டு, தனித்து கணிசமான வாக்குகளைப் பெற்று விஜய் முதலமைச்சர் பதவியை கைப்பற்றியதாக தவெக தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸ் ஆதரவோ அல்லது ராகுல் காந்தியின் அரசியல் செல்வாக்கோ தங்களது ஆட்சி அமைப்பதற்கான முக்கிய காரணம் அல்ல என்ற நிலைப்பாட்டில் தவெக இருப்பதாக தெரிகிறது.

இதனால், தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் தொடர்ந்தாலும், தேசிய அரசியலில் காங்கிரஸ் முன்வைக்கும் அரசியல் நிபந்தனைகளுக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதையே விஜய்யின் தற்போதைய அணுகுமுறை வெளிப்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில், தேசிய அளவில் கூட்டணி கணக்குகள் பலமுறை மாறக்கூடும். இருப்பினும், விஜய்யை தேசிய அரசியலில் முன்னிறுத்தும் முயற்சியும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் வலியுறுத்துவதும் ஒரே நேரத்தில் தீவிரமடைந்தால், தமிழகத்தில் தவெக-காங்கிரஸ் கூட்டணிக்குள் அடுத்தகட்ட அரசியல் மோதல்களுக்கு இது வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal