கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சவுந்தர்யா நடிப்பில் வெளியான 'படையப்பா' திரைப்படம், தமிழ் சினிமாவின் எக்காலத்திற்குமான மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாகும்.
1999-ஆம் ஆண்டு வெளியான இப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, கடந்த டிசம்பர் மாதம் ரஜினியின் 75-ஆவது பிறந்தநாள் பரிசாக திரையரங்குகளில் மீண்டும் வெளியானது.
ரீ-ரிலீசிலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்ததால், நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் மற்றும் குழுவினரை ஏற்கனவே நேரில் அழைத்து பாராட்டியிருந்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் ஒரு நெகிழ்ச்சியான காரியத்தைச் செய்துள்ளார்.
படையப்பா படத்தின் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனைத் தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்துப் பாராட்டிய அவர், அவருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்குப்பிறகும் ஒரு படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது படக்குழுவினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

