மறைந்த புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான 'யசோதா மற்றும் கிருஷ்ணா' (1890-களில் வரையப்பட்டது) என்ற ஓவியம், மும்பையில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்ற சஃப்ரான் ஆர்ட் (Saffronart) ஏலத்தில் சுமார் ₹167.20 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், ஒரு ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட இந்தியக் கலைப்பொருள் என்ற பெருமையை இந்த ஓவியம் பெற்றுள்ளது.
சுமார் 7 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான ஏலப் போட்டிக்குப் பிறகு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியத்தைச் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India) தலைவர் டாக்டர் சைரஸ் எஸ். பூனாவாலா வாங்கியுள்ளார். இதற்கு முன்பு மறைந்த ஓவியர் எம்.எஃப். உசைனின் ஓவியம் ₹118 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. "இந்தத் தேசியச் சொத்தைப் பாதுகாப்பதில் பெருமை கொள்கிறேன்; இது அவ்வப்போது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்" என்று பூனாவாலா தெரிவித்துள்ளார்.

